தொடரும் எண்டோ சல்பான் துயரம்

“மழைவந்தால் பயமா இருக்கு சார். பையன் வீட்டுக்கு வெளியிலேயே இருப்பான். நின்ற இடத்திலேயே மலஜலம் கழித்து, மழை யில் நனைந்து, குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பான். நாங்கள் ஐந்து மணிக்கு வேலை முடித்து வந்து அவனை குளிப்பாட்டி வீட்டுக் குள் கொண்டு வருவோம். சில நேரங்களில் வலிப்பு வந்துவிடும். இப்படிப்பட்ட குழந்தை யை யாரும் சேர்த்துக் கொள்ளவும் மாட்டார் கள். அவனுக்கு 22 வயதாகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியல...” என்று கண்ணீர் விட்டு அழுதார் லட்சுமி என்ற தோட்டத் தொழி லாளி. கூடலூர் அருகில் நெலாக் கோட்டை ஊராட்சியில் ரக்வுட் என்ற ஒரு தனியார் தோட்டத்தில் பணியாற்றும் இந்த தம்பதி யரின் 3 குழந்தைகள், 2 ஆண் குழந்தை களுக்கும் மூளைவளர்ச்சி இல்லை.

இதே பகுதியில் அம்சா ஆயிஷா தம்பதி யரின் 30 வயதான பவுசியா என்ற பெண் இதை விட மோசமான நிலையில் உள்ளனர். சைனு தீன் என்பவரின் 7 மற்றும் 3 வயதான இரண்டு பெண் குழந்தைகளும் பிறவி யிலேயே ஊனமாக உள்ளனர். குழந்தை களுக்கு நடக்கவும் அமரவும் கூட முடியாது. இதனால் எஸ்டேட் வேலையை ராஜினாமா செய்து குழந்தைகளை பார்த்து வருகிறார்கள். ஜோஸ் என்பவரின் 30 வயது பெண்ணும் மூளை வளர்ச்சியில்லாமல் உள்ளார். கருப் பாயி என்பவரின் 20 வயது பெண் எழுந்து நடக்க இயலாமல் படுக்கையிலேயே உள்ளார். முனியம்மாளின் 3 குழந்தைகளுக்கும் கேட்கவும், பேசவும் இயலாது. 17 வயதுடைய முபீனா என்ற பெண்ணும், 12 வயதான அன்னது என்ற பெண்ணும், அபுவின் 22 வயதான பெண்ணும், அபூபக்கரின் 20 வய தான பெண்ணும், ஜூமான (10 வயது) என்ற பெண் குழந்தையும், 22 வயதான ரைனாஸ் என்ற இளைஞனும் மூளை வளர்ச்சியின்றி சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல் உள் ளனர். உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மனம் வளராத தால் என்ன செய்கிறார்கள் என்று இவர்க ளுக்கு தெரிவது இல்லை.

“ என் குழந்தைக்கு 30 வயதிற்கான உடல் வளர்ச்சி உள்ளது. ஆனால் சிறுகுழந்தை போன்ற பெண் ணை பராமரிப்பது கஷ்டம் தான். கடவுள் எங்களுக்கு இப்படி செய்துவிட் டார் என்று நான் நினைக்கவில்லை. கடவு ளுக்கு சேவை செய்வதாகவே கருதுகிறேன். இனி மேல் எந்த கேம்புக்கும் என் குழந்தை யை கொண்டு வரமாட்டேன். எல்லோருக்கும் காட்சிப் பொருளாக்க முடியாது. கேம்பில் வெள்ளக்காரங்க வராங்க, போட்டோ புடிச்சி போறாங்க, என் புள்ளைக்கு எந்த பிரயோசன மும் இல்லை.” என்றார் அம்சா என்ற தோட் டத் தொழிலாளி. இந்த தனியார் தோட்டத் திலும், அதையொட்டிய பகுதியிலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட 17 குழந்தைகள் உள் ளனர். பிறவியிலேயே உடல் உறுப்புகள் பாதிக் கப்பட்டதாக 10க்கும் மேற்பட்டவர்கள் உள் ளனர். ஒரு சிறு கிராமத்தில் இத்தனை பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில் லை. அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் ஏழை தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. நெல்லியா ளம் நகராட்சி தேவாலா பகுதியில் 12க்கும் மேற்பட்டவர்கள் இத்தகைய பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள். ஒரு தனியார் தேயிலை தோட்டத்திலும் அதையொட்டிய பகுதியிலும் தான் இந்த பாதிப்பு அதிகமாக தெரிகிறது. ஸ்ரீ மதுரை ஊராட்சியில் காய்கறி, காப்பி மற்றும் வாழை விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் 10க்கும் மேற்பட்டோர் இதே நிலையில் உள்ளனர்.

கூடலூர் நகராட்சியில் 3 மையங்களில் இத்தகைய பாதிப்புக்கு ஆளான சுமார் 80 குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். எண்டோ சல்பான் உள்ளிட்ட களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான் ஒழிப்பு விஷத்தின் பாதிப்பு இப்பகுதியில் உள்ளதா என்று கண்டறிவதற்காக ஒருசிலரை சந்திக்க திட்டமிட்டு, பாதிக்கப்பட்ட சில குடும்பங்களி டம் பேசியபோது, சங்கிலித் தொடராக எண் ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது.

எந்த விதமான பாதுகாப்பு நடைமுறை களையும் கையாளாமல் பயன்படுத்தும் ஆபத் தான பூச்சிக் கொல்லிகளால்தான் இந்த அப் பாவி மக்கள் பாதித்து உள்ளனர். இல்லை என்றால் காரணம் என்ன? எதிர்கால சந்ததி களுக்கு இதே நிலை ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அன்றாட வாழ் வுக்கு அவதிப்படும் ஏழைத் தொழிலாளி களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு அவர்களது குடும்ப சமூக வாழ்வையே கேள்விக் குறியாக்கி உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வருமா? போன்ற கேள்விகள் எழுகிறது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக ளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்து வரும் கூடலூர் புஷ்பகிரி மருத்துவமனை யின் மருத்துவர் சிஸ்டர் ‘அன்னா’ மருத்துவ உதவி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 360க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து மருத்துவ உதவி பெற்று வரு கிறார்கள். பதிவு செய்தவர்கள் 20 சதவிகிதத் தைவிட குறைவாகத்தான் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. புதிதாக நோய் தாக் கியவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. வலியால் துடிக்கும் இவர் களுக்கு மருத்துவ உதவிக்கும் ஆறுதலுக்கும் இத்தகைய மையங்கள் ஒவ்வொரு பஞ்சாயத் திலும் அமைக்க வேண்டும். கேரள அரசு அங்கே இதுபோல் அமைக்க உதவி செய்தது என்கிறார்.

தேவாலா அட்டியை சேர்ந்த சசி குமார் (வயது 37) என்ற தொழிலாளி புற்று நோயால் பாதிக்கப்பட்டு ரூபாய் 3 லட்சம் வரை கடன்பட்டு செலவு செய்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள னர். இவர் ஒவ்வொரு மாதமும் மருத்துவ சிகிச்சைக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்ய இயலாமல் கடுமையான வலியோடு போராடி வருகிறார். கடந்த காலம் முழுவதும் விவசாயப் பணிக்கு மருந்தடிக்கும் பணி செய்யும் போது அந்த விஷத்தின் தன்மையோ, பாதுகாப்பு நடை முறைகளையோ இவர் அறிந்ததே இல்லை. பூச்சிக் கொல்லிகளின் பாக்கெட்களில் சிகப்பு, மஞ்சள், நீல நிற அடையாளங்களை இவர் கவனித்ததே இல்லை. இத்தகைய ஏழை-எளிய தொழிலாளிகளை பாதுகாக்க, அவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு மனிதாபிமானத்தோடு முன்வர வேண்டும்.

காசர்கோடில் எண்டோசல்பான் விதைத்த துயரம் குறித்து ஊடகங்களில் வரும் செய்திகளை தொலை தூரத்தில் நிகழ்ந்து வரும் ஒரு செய்தியாகவே பலரும் கருதுகிறார்கள். அத்தகைய முகங்கள் நம்முன் நிற்கும் போது பாவ புண்ணியங்க ளின் மீதோ, கடவுளின் மீதோ பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளவே நினைக்கிறார் கள். இந்த தோட்டத்தில் எண்டோசல்பான் பயன்படுத்துவது இல்லை என்றார் ஒரு எஸ்டேட் சூப்ரவைசர். ஆம் அதுவும் உண் மைதான். பாரிசல்பான், எண்டேசெல், ஹில் டன் போன்ற பெயர்களில்தான் சந்தையில் கிடைக்கின்றது. உலக சுகாதார நிறுவனம் கிளாஸ் 1 அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று வகைப்படுத்திய பாரக்யூட் போன்ற விஷத்தை தடையேதும் இன்றி பயன்படுத்தி, அதனால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நியாயம் வழங்க அரசு முன்வரவேண்டும்.

பரவலாக காணப்படும் கர்ப்பப்பை புற்று நோய், அபரிமிதமான அளவு புற்றுநோய் தாக்கம், மூளை வளர்ச்சியின்மையும், பிறவி ஊனமும் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, பூஞ்சான் ஒழிப் பையும், ரசாயனங்களை அதிகமாக பயன் படுத்த வாய்ப்புள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும்.

மேலும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படா மல் இருக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வும், நோய்தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு உடனே துவங்க வேண்டும். இப்பகுதி யில் அதிநவீன மருத்துவமனை துவங்கவும் அரசு முன்வர வேண்டும். “ நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு இப்படி ஆயிடுச்சி சார். நான் நல்லா படிப்பேன். நின்றாலும் உட் காந்தாலும் இடுப்பு கழண்டுபோற மாதிரி வலிக்குதுசார். எனக்கு இந்த பிரச்சனை சரி யாயிடுமா சார்”. தலையும், வயிறும் பெருத்து, சரியாக நடக்க முடியாமல் தவிக்கும் தேவாலா அட்டியைச் ஆசிர்வாதத்தின் 13 வயது மகன் மோஸசின் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?

கட்டுரையாளர், மாநில அமைப்பாளர், தமிழ்நாடு தோட்டத்தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு

இன்றைய கார்ட்டூன்