அவர் போட்ட முற்றுப்புள்ளிகள்

முதல் விதைகளாய்

மார்க்சியத்தை

எது தூவியது இந்த நாட்டில்

செக்கச் சிவந்த

சிங்காரவேலர் கையைத் தவிர?

மூலதனத்தின்

பக்கங்களில் அவர் மூளை,

போகவில்லை

பொழுதென்று போகவில்லை!



வெப்பத்தில் கொப்பளித்த வேர்வைக் குலத்துக்கு

விடை தேடிப் போனது

கண்ணீரில்

கவிழ்ந்த கப்பல்களைக்

கரைதேற்ற

வழி தேடிப் போனது.



ஏழைக்குக்

கிழக்கைத் திறக்க

மார்க்சிய மந்திரமே

ஏற்றதெனக் கண்டார்.



ஆனால்

பூசாரிகளின் மந்திர உச்சாடனம்

கவைக்குதவாது என்பதனால்

களமிறங்கிப்

போராட - அந்த மந்திரத்தில்

‘ஆயுதம் செய்வோம் - யுத்தம்

ஆரம்பம் செய்வோம்’

என்றார்.



தர்க்கங்களின்

தாழ்வாரங்களில் - நரக, சுவர்க்கங்களின்

விக்கல்களுக்கும்

இதிகாச விருத்தியுரை அளப்போரிடையே



அவர்

மானுடத்தை மீட்டெடுக்க

விரல்களின் வித்தையவை

பழைமைக்குப்

பதவுரை பொழிப்புரைகள் அல்ல;

அவை

புதுமைக்கு விடிவுரை தொடர் உரைகள்.

இட்ட அரைப்புள்ளி காற்புள்ளிகள் கூட

இயங்கியல் புள்ளிகள்;

இருள் மதவாதம்

எதிர்த்துப் போராடப்

பொருள் முதல்வாதம் - அவர் போட்ட

முற்றுப் புள்ளிகளிலும்

இருந்தன.



பகுத்தறிவுப் பாதையைத்

தந்தை பெரியார் போட்டார்.

சிங்காரவேலர்

வெளிச்சம் அடிக்க அதில்

விளக்குகள் போட்டார்.



ஆயிரம் ஆயிரம்

அறிவியல் கருத்துக்களை

ஓயாமல் கொட்டிய சிங்காரவேலரை

விடுமுறை போடாத

காலம் அறியும்...

வீடுதோறும் இருக்கும்

தமிழர்கள் அறிய வேண்டாமா?



பறக்கும்

செங்கொடிகளின் இந்த ஓட்டமாக

இருக்கும் அவரை

உடைந்து நொறுங்காத

காற்று அறியும்...

உழைக்கும் வர்க்கம் உணர வேண்டாமா?



மேதினச்சாவி கொண்டு பதினோரு

மாதங்களிலும் சேர்த்து உரிமையைத் திறந்த

வரலாற்றை - இங்கே

வார்த்தெடுத்தவரை

கண்ணுறங்காக் கடல்கள் அறியும்

கண் திறந்து

நம் வாழ்க்கை காண வேண்டாமா?

இன்றைய கார்ட்டூன்