அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஏதோ தவறுதலாக சொல்லப்பட்டது என கருத வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழ் நாடு அரசுஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு சென்னையில் 19-08-2007-ல் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் அந்த மேடையிலும் இதே தவறான தகவலை தெரிவித்தார். அதற்கு சாலைப் பணியாளர் சங்கத்தின் அன்றைய மாநிலத் தலைவர் சண்முகராஜாவும், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்துவும் மறுத்து அறிக்கை விட்டனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இன் னொரு தவறான தகவல் கடந்த 25-02-11 அன்று முதல்வரின் கோபாலபுர இல்லத்தில் சாலைப் பணியாளர்களின் பிரதிநிதிகளாக தான் ஐந்தாறு பேரை சந்தித்ததாக குறிப்பிட் டுள்ளார். இந்த ஐந்தாறு பேர் யார் யார் என்பது கூட முதல்வர் அறியவில்லை போலும். கலைஞர் முதல்வராக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் தங்கள் மாநாட்டிற்கு தவறாமல் இதுவரை அழைத்து வருகின்ற சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன், மாநிலப் பொருளார் என்.இளங்கோ, மாநிலச் செயலாளர் மு.அன்பரசு மற்றும் மாநில துணைத்தலைவர் ப.ரவி ஆகியோர் முதல் வரை சந்தித்துள்ளனர் என்பது கூட முதல் வர் அறிந்திருக்கவில்லை என்பது வினோத மாக உள்ளது. அல்லது அரசு ஊழியர் சங் கத்தை அறியாதவராக தன்னை காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சிக்கிறாரா?

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றப்படும் என வாக்குறுதி தந்த திமுக அரசு, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அதை செய்ய தவறியதை கண்டித்துத்தான் சாலைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டபோது ஒன்றுபட்டு போராடி மீண்டும் பணிபெற்ற சாலைப் பணியாளர் சங்கத்தை பிளவுபடுத் தியது திமுக ஆட்சியாளர்கள்தான் என்பதை சாலைப் பணியாளர்கள் நன்கு உணர்வர்.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்த தோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டி ருப்பதாக குறிப்பிட்டிருப்பதுதான். கடந்த 25 ஆண்டுகாலமாக காலமுறை ஊதியம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சத்து ணவு ஊழியர்களுக்கு கலைஞர் தந்திருப்பது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்படாத ஊதி யம்தான் என்பதை மறைக்க முதல்வர் முயல் கிறார். 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை ஏற்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊதிய மாற்ற ஆணையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.4800 மற்றும் தரஊதியம் ரூ.1300 (ரூ.5100) ஆகும். ஆனால் சத்துணவு ஊழியர் களுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் சிறப்பு காலமுறை ஊதியமோ ரூ. 2500 மற்றும் தர ஊதியம் ரூ.500 (ரூ.3000) ஆகும். கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இது காலமுறை ஊதியம் அல்ல, கலைஞரின் அதிகாரிகளின் அண்டா மூளைகளால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு (!) காலமுறை ஊதியம்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தை பொறுத்தவரை, புதிய ஓய்வூதிய திட் டமும் இல்லாமல் பழைய ஓய்வூதிய திட்ட மும் இல்லாமல் புதிதாக ஒரு சிறப்பு(!) ஓய் வூதிய திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.700,600,500 என கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுவிட்டு ஓய்வ+தியம் வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாக தவறான தக வலை தனது கடிதத்தில் தந்துள்ளார். ஒப் புக்கு கலைஞர் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்துள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியம் என்றே எடுத்துக்கொண் டாலும் அதில் 50 விழுக்காடு மாத ஓய்வூதி யமும், பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருப் பதைப் போல் கருணை கொடையும் வழங்கி யிருக்க வேண்டும். அதுவும் கூட வழங்கப் படவில்லை என்பதுதான் உண்மை.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல் 1-1-2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும். தமிழக அரசு ஆணையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1-1-2006 முதல் கருத்தியலாகவும் 1-1-2007 முதல் தான் நிதிப்பயனும் தரக்கூடிய வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது முதல்வ ருக்கு தெரியாதா? இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசு தனது ஊழியர் களுக்கு தந்திருப்பது போல் 1-1-2006 முதல் நிதிப்பயன் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருவதை அதிகாரிகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லையா?

செய்யாததை எல்லாம் செய்ததாக, அதி காரிகள் எழுதி தந்ததையெல்லாம் சாதனை யாக அறிக்கையாக வெளியிடுவது முதல்வ ருக்கு இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இந்த 5 ஆண்டுகாலத்தில் திரும்பத் திரும்ப பணி நியமனத் தடை ஆணை திமுக ஆட்சி யில் அகற்றப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆட்சியில் பணி நியமனத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதும், அதே ஆட்சி யின் இறுதியில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் (அரசு ஆணை எண்.14 ப.ம.நி.சீ.தி.து நாள் 7-2-2006 ) அனைவரும் அறிந்ததே. திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நியமனங்க ளுக்கு மறைமுகமான தடை (நிபந்தனைகள்) விதித்து அரசு ஆணை எண்.91 ப.ம.நி.சீ.தி.து. நாள் 7-6-2006) பிறப்பித்தது என்பதுதான் உண்மையாகும். தமிழக அரசு 4 லட்சம் பணி யிடங்களுக்கு மேல் நிரப்பியதாக திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு, இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப் பட்டவர்களைப் போல் ஒரு தோற்றத்தை தமிழக மக்களிடையே உருவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. ஏமாறப் போவது மக்கள் அல்ல; ஆட்சியாளர்களே!

கடந்த 25-02-11 அன்று முதல்வர் தனது இல்லத்தில் சந்தித்த தலைவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள். இவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வருக்கு எப்படி ஏற்பட்டது. ஊதியக்குழு ஆணையில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமையில் கடந்த 23-02-11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தை கலைஞரின் அரசு கண்டும் காணாமல் விட்டதின் விளைவாக சங்கத் தின் பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை நோக்கி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க ஊர் வலமாக புறப்பட்டனர். அவர்களைத்தான் காவல் துறை முன்னே போகவிட்டு பின்னே தாக்கியுள்ளது. ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்த ஊழியர்கள் காவல் துறையால் கடுமை யாக தாக்கப்பட்டு, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி அன்றைய தினம் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளி யேறி ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் கிடைத் தவுடன்தான் அரசு முழித்துக்கொண்டு, முதல்வரின் காதுக்கு செய்தி சென்று முதல் அரசுஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார்.

கலைஞரின் பொறுப்பில் உள்ள காவல் துறை கடந்த 5 ஆண்டு காலத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய தையும், சட்டக்கல்லூரி மாணவர்களின் தாக்குதலை கண்டுகளித்ததையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள், தங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப் பட்டுவிட்டது என நீதிமன்றங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மக்க ளின் ஏளனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி யுள்ள நிலையில் இன்று அரசுஊழியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய கலைஞரின் காவல் துறை அரசு ஊழி யர்களை கண்மூடித்தனமாக தாக்கி காயப் படுத்தியுள்ளது. காவல் துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் கண்டித்துள்ள நிலையில் ஒன்றும் நடைபெறாதது போல் கலைஞர் காட்டிக் கொள்ள முயல்வார் என்றால், அவருக்கு தக்க பாடத்தை அரசு ஊழியர்கள் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்றைய கார்ட்டூன்