இராஜராஜம்

மன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறுக்க முடியாத வரலாற்று பிம்பம். ஆயிரக்கணக்கான தமிழகத்தின் குறு, பெரு மன்னர்களும், பேரரசுகளும் வந்து சென்றாலும் ராஜராஜன் பேசக்கூடிய மனிதனாக வாழ்ந்துள்ளான். தஞ்சை பெரியகோவிலின் 1000 மாவது ஆண்டு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியதோடு அமைச்சர் பெருமக்களும் தங்களின் ஆட்சியை மன்னர் கால ஆட்சியோடு ஒப்பிட்டு பேசியதன் துவக்கமே ஆசிரியரின் இந்த புத்தக உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்..
                கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் கரிகாற் பெருவளத்தான் கல்லும், களிமண்ணும் கொண்டு காவேரியின் குறுக்கே கொள்ளிடத்தின் அருகே கல்லணையை கட்டியது இன்றும் நவீன பொறியியல் தொழில்நுட்பத்திற்கு சவாலான விசயமாக இருந்து வருகிறது. இதனை ஆராய்ந்த பல வெள்ளை அதிகாரிகள் பின்னர் பல்வேறு பகுதிகளில் அணைகளை கட்டியதாக வரலாறுகள் கூறுகிறது.
                இப்படி முற்கால சோழர்களின் வழியில் கரிகாலனுக்கு பின் சரியாக 900 ஆண்டுகள் கழித்து மன்னன் ராஜராஜன் தஞ்சையில் உள்ள  பிரகதீஸ்வரர் கோவில் என்கிற பெரிய கோவிலை கட்டினான். கி.பி 850க்கும் 1200க்கும் இடையில் சுமார் 300 கோயில்களுக்கு மேல் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதே நேரத்தில் இயற்கை சீற்றங்களால் 108க்கும் மேற்பட்ட கோயில்கள் அழிந்து போயின.  கி.பி 1010 ஏப்ரலில் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்ட போது இதர கோவில்களை விட 40 மடங்கு பெரிதாக காட்சியளித்தது.  கோவிலை சுற்றி உள்ள 200 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை கொண்டு நூற்றுக்கணக்கான யானைகளை கொண்டு இந்த கட்டிட பணியை செய்து முடித்தான் மன்னன் ராஜராஜன். இதனுடைய வருமானத்திற்கு செல்வ செழிப்பு மிக்க 35 கிராமங்களின் மொத்த நிலங்களையும் கோவிலுக்கு தாரை வார்த்தான். இப்படி கோவிலை கட்டியவனுக்கு பின்புலமாக இருந்த அந்த உழைப்பாளி மக்களின் நலனை பாதுகாக்க தன்னுடய ஆட்சி  (கி.பி 985 - 1014 ) காலத்தை முழுமையாக பயன்படுத்தினானா என்பதே விவாதத்திற்குரியதாகும்.
                இராசராசன் ஒரு சனநாயக சிற்பி, தமிழ்மொழியை போற்றி வளர்த்தவன், கல்விக்கண் திறந்தவன், சமய நல்லிணக்கவாதி, பெண் உரிமை பேணியவன், நிலங்களை அளந்து வேளாண்மை புரட்சிக்கு வித்திட்டவன், சாதிப் பூசலுக்கு இடம் கொடாதவன், அடிமைத்தனம் அகற்றியவன், சட்டஒழுங்கு பிரச்சனை இன்றி ஆட்சி நடத்தியவன், கலைகளின் காவலன் என்ற அடைமொழிக்கு ஒப்பாக ஆட்சி நடத்திய மன்னன் ராஜராஜசோழன் என்று தற்போதைய ஆட்சியாளர்களால் புகழாரம் சூடப்படுகிறது. இது உண்மைதானா என்று இந்த புத்தகம் முழுவதும் பல்வேறு ஆதாரங்களோடு  ஆராயப்படுகிறது.
                ராஜராஜன் காலத்திய சனநாயகத்திற்கு ஆதாரமாக சொல்லப்படும் குடவோலை முறை தேர்தல். ராஜராஜனுக்கு முன்பே 8, 9 ம் நூற்றாண்டுகளில் பாண்டிய மன்னர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்ததாக மானூர் கல்வெட்டு கூறுகிறது.
 உத்திரமேரூர் கல்வெட்டில் குடவோலைமுறை தேர்தல் விதிமுறைகள் குறித்தும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வாக்காளருக்கு உள்ள தகுதிகள் குறித்து கூறுகிறது.
                1. கால்வேலி நிலம் இருக்க வேண்டும். 2. சொந்த வீட்டுமனை இருக்க வேண்டும். 3. வயது வரம்பு 33 லிருந்து 70 வரை இருக்க வேண்டும். 5. மந்திரம் பிரமாணமாவது தெரிந்திருக்க வேண்டும். 6. ஒரு வேதமும் கற்காதவர் எனில் ஒரு வேலி நிலமும், சொந்த வீடும் உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தகுதிகளை உடையவர்களின் பெயர் ஒரு ஓலையில் எழுதி குடத்தில் போடப்பட்டு அதை இரவும், பகலும் இன்னதென்று அறியாத பிராமண சிறுவன் மூலம் எடுக்க வைத்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
                இந்த சனநாயகத்தில் ஒன்று தெளிவாக தெரிந்தது. காசு உள்ளவன், மேல் சாதியினர் மட்டுமே தேர்தலில் நிற்க முடிந்தது. அன்றும் உழைப்பை செலுத்தி சமூகத்தை நடத்திய பெரும் பகுதி உழைப்பாளிகள் வேடிக்கை பார்த்தே ராஜராஜனின் சனநாயகமாக இருந்தது.
                தமிழ் மொழியை வளர்த்தவன் என்ற பெருமையை காட்டிலும் வடமொழியான சமஸ்கிருதத்தை வளர்த்தவன் என்றே சொல்லலாம், அவனுடைய அனைத்து ஆக்கமும், ஊக்கமும் பிராமணியத்தை மையமாக கொண்டே நடைபெற்றது, ராஜராஜனுக்கு வழங்கப்பட்ட 42 பட்ட பெயர்களையும், அவன் பிராமணர்களுக்கு வழங்கிய கிராமங்கள், ஊர்களுக்கு இடப்பட்ட பெயர்கள், அவனது பெயரில் வழங்கப்பட்ட பகுதிகள், பள்ளிகளில் வடமொழி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், உதவிகள் என அனைத்தும் வடமொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவே இருந்தது. அதேபோல் நாட்டுபுறக் கலைகள்,  தாழ்த்தப்பட்ட மக்களின் கலைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட, அடக்கப்ப்டட மக்களின் கலைகள் அனுமதிக்கப்படாமல் பல அடி தூரம் கோயிலுக்கு வெளியே தள்ளி நிறுத்தப்பட்டது.
                ராஜராஜன் காலத்தில் தான் பெண்களை கோவிலுக்கு பொட்டு கட்டி விடும் தேவதாசி முறை என்பது இருந்தது. பெண்களுக்கு முத்திரையும், சூலச்சின்னம் பழுக்க காய்ச்சிய இரும்பால் பெண்ணின் பாதத்தில் பதிய வைக்கப்படுகிறது, பெண்கள் அடிமைகளாக கோவில்களுக்கும், அந்தணர்களுக்கும் விற்கப்பட்டதற்கும் ஏராளமான சான்றுள்ளது, அதில் திருவாலாங்காடு நாயனார் கோவிலுக்கு 200 காசுக்கு 4 பெண்கள் விற்கப்பட்ட சான்றுள்ளது. முதலாம் ராசராசன் காலத்தில் தான் தாலிகட்டும் வழக்கமும், உடன்கட்டை ஏறும் வழக்கமும் உருவானதாகவும் திருவாலாங்காடு செப்பேடு கூறுகிறது. 1929ல் தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முன்முயற்சியில் தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
                ராஜராஜன் வாழ்ந்த காலத்தின் சமூக சூழலில் இருந்து அவனது நடவடிக்கைகளை மதிப்பிட வேண்டும் என தமிழக அறிவு ஜீவிகள் கூறுகின்றனர். மனித குல வரலாற்றின் வளர்ச்சியில் குடும்பம், தனிசொத்து அதன் பின்னணியில் அரசின் தோற்றம் உருவானது என்பதே உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவலான கருத்து. அன்றிலிருந்து சமூகத்தின் சொத்துக்களை ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காக, பேராசைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டது, இதற்கு எதிராக கிளர்ந்து எழுந்த உழைப்பாளி மக்களின் ரத்தமும், சதையும், உயிரும் பறிக்கப்பட்டது. அடக்குமுறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட இழப்புகளை ஒரு போதும் ஆளும் வர்க்கங்கள் பதிவு செய்ததில்லை, அவர்களின் சாதனை ஆவணங்களில் இருந்து அவர்களின் அடக்குமுறை குறித்த பதிவுகள் அறிந்து கொள்ளப்படுகிறது.  சோழர்களின் காலத்தில் தான் கடுமையான நிலவரிக்குஎதிராக விவசாயிகள் மன்னனின் மகனையே கொன்றனர். அப்படிப்பட்ட கிளர்ச்சிகளும் நடைபெற்றது. ராஜராஜ சோழன் காலத்திய 3500க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும்.
                தஞ்சை பெரிய கோவிலின் சொத்து 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் என்றும் 1962 லேயே அது 20 ஆயிரம் ஏக்கராக குறைந்துவிட்டது என்று சி.பி. ராஜமாணிக்கம் அய்யர் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதியில் ராஜராஜ சோழனின் பாரம்பரியத்தை பேசும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரலாற்றை திரிக்கும் மதவெறிகூட்டத்துடன் சேர்ந்துவிட்டாரோ என்ற ஐயமே ஏற்படுகிறது.
                91 பக்கங்களை கொண்டிருந்தாலும் ஏராளமான வரலாற்று செய்திகளை ஆதாரங்களோடு சரியான முறையில் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளார் ஆசிரியர் வெ.ஜீவபாரதி. இதனை எளிய நடையில் அச்சிட்டுள்ளனர்.

இன்றைய கார்ட்டூன்