ஆர்எஸ்எஸ் நாடகம் அரங்கேறாது...

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற வெறியில் பல நாடகங்களை நடத்தி வருகிறது. அதிலே ஒரு நாடகமாக இஸ்லா மியர் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்றுபெயரும் வைத்துள்ளது. அவர் களின் உரிமைகளுக்காகவும் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டிருக்கிறதாம்.., எந்த ஏமாளி யும் பிஜேபியின் இந்த நாடகத்தை நம்பமாட்டான். ஆனால், நம்ப வேண்டும்... ஏமாற்ற வேண்டும். . . என்பதற்காக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.

தன்னுடைய கட்சி முஸ்லிம் மக்களுக்கு மனம் புண்படும்படி ஏதேனும் செய்திருந்தால் அந்த செய லுக்காக மன்னிக்கும்படி கை கூப்பி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான நடிப்பை ஏன் இவர் இப்படி அரங்கேற்றி உள்ளார்? இன்னும் ஒருமாதத்தில் நடக்க இருக்கிற நாடாளு மன்றத் தேர்தல்தான் பாஜகவை இப்படி வேஷம்போட வைத்திருக்கிறது. மோடி யை எப்படியும் பிரதமராக்க வேண்டும்... அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் அடிபணிய பாரதிய ஜனதா கட்சி தயாராக இருக்கிறது. முஸ்லிம்களுக்காக வேறு எந்தக் கட்சியாவது சலுகை தெரிவித்தால், அது முஸ்லிம்களை தாஜா செய்வது, அவர்களின் ஓட்டை வாங்குவதற்காக நடிப்பது என்று சொல்லி வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்தப் புதிய வேஷத்தை குற்றம் சாட்டுவதில் கொஞ்சமும் தவறில்லை. முஸ்லிம் களின் ஓட்டை வாங்க இதுதான் பிஜேபிசெய்யும் உண்மையான தாஜாவாகும்.
இவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட் கிறாரே. . . கோத்ரா ரயில் விபத்தை ஒட்டி முஸ்லிம்கள் மீது மோடி தலைமையில் நடந்த ஈவிரக்கமற்ற நரவேட்டைக்கு மோடி இன்னமும் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த பயம் இருப்பதால்தான் மோடி குஜராத்திலும், மற்ற ஒரு மாநிலத்திலும் போட்டிபோட இருக்கிறார். இவரு டைய விளம்பரத்திற்காக இது வரை ஆயிரம் கோடிக்கு மேல் செலவுசெய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படு கிறது. குஜராத்தில் நடந்த கொடுமையின் காரணத்தால், குஜராத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நொந்து கிடக்கிறார்கள். இதை எப்படி இந்திய முஸ்லிம்கள் மறக்க இயலும்?நானூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட பாபர் மசூதியை இடித்து, அதன் விளைவால் இந்தியாவின் பல இடங்களில் ரத்தக் களறியை உண்டாக்கிய கொடுமையை இந்திய முஸ்லிம்களால் எப்படி மறக்க இயலும்?
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் எல்லாரிடமும்கூட, இந்தப் பெரிய நிகழ்ச்சிகள் பெரும் ஆத்திரத்தை உரு வாக்கியுள்ளன. மேலும், இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த முசாபர்நகரில் தேர்தலைக் குறியாக வைத்து கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக பயந்து கிடக் கிறார்களே அதை எப்படி முஸ்லிம் மக்கள் மறுக்க முடியும்? கிராமங்களிலும் மத மோதலை.. . அந்த விஷத்தை தூவு கிற பிஜேபி கேட்கும் மன்னிப்பை எப்படி ஏற்க முடியும்? சச்சார் கமிஷன் அறிக்கை வெளி வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்.-ன் அன்றைய பொதுச் செயலாளர் மோகன் பகவத் பேசியது என்ன? -தேர்தலில் வெட்கக் கேடான முறையில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் தந்திரமாக அவர்களை தாஜா செய்யும் முயற்சி நடக்கிறது. சச்சார் கமிஷன் முஸ்லிம் மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து பொய்யான தகவல்களை கொடுத்தது. அந்தப் பொய்யான பரிந்து ரைகளை அமலாக்கினால் இன்னொரு தேச பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்- இப்படி ஒரு பாஷானத்தைக் கக்கினார்.
அதே வேகத்தில் அன்றைய ஆர் எஸ் எஸ் பரிவாரமான விஷ்வ இந்து பரிசத் தலைவர் தொகாடியா இதைவிட ஒரு அடி மேலே சென்று, இஸ்லாமியர்கள் சர்வதேச தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், மதவெறியர்கள், அவர்கள் தீவிரவாத கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, சச்சார் கமிஷன் அறிக்கை முஸ்லிம்களை வசீகரிக்கும் பொய்யான அறிக்கை என்று கொக்கரித்தார். முஸ்லிம்களுக்கான இட ஒதுக் கீட்டை அமலாக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்க இந்த இந்துத் துவா கும்பல்தான் முயற்சி எடுத்தன. இப்போதும் எடுத்து வருகின்றன. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை இல்லாமலேயே, வழக்கு தொடுக்கப் படாமலேயே சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இது நியாயமல்ல. உரியவிசாரணைகள் நடத்தி குற்றமற்றவர் களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று இடதுசாரிகள் கேட் டால், உடனே அதற்கும் பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதனை வைத்து ராஜ்நாத்சிங்கின் பொது மன்னிப்பை இஸ்லாமியர்கள் ஏற்பது? நம்புவது? சில இஸ்லாமியர்கள் சந்தர்ப்ப வாதிகளாய் இந்தக் கும்பலோடு இணையலாம். இதை வைத்துக் கொண்டு பிஜேபியினர் தாங்கள் முஸ்லிம்களுக்காக இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இஸ்லாமியர் களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு ஒரு தந்திரமே தவிர... உண்மையல்ல. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததை மோடி காரில் சென்றபோது அடிபட்ட நாய்க்குட்டியை அல்லவா உதாரணம் சொன்னார். இரக்கம் என்ற ஒன்று இல் லாத அரக்க குணம் படைத்த மோடியை முஸ்லிம் மக்கள் எப்படி ஏற்பார்கள்?இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை பற்றி இவர்கள் கொள்கை கள்தான் என்ன? ஒரு முறை சரித்திர பேராசிரியர் கே.என்.பணிக்கர் நல்ல ஒரு கருத்தை முன்வைத்தார். அதாவது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே சிறுபான்மையினரின் உரிமைகள் எந்த அளவிற்கு உள்ளடங்கி இருக்கிறது என்பதை வைத்துத்தான் பார்க்க முடியும். இந்தியா போன்ற பன்முக கலாச்சாரம் உள்ள ஒரு நாட்டில் சிறுபான்மையினரின் நலன்கள், உரிமைகள் வளர்த்தெடுக்கப்பட வேண் டும். மனிதன் என்றால் அவனுடைய மொத்த அமைப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு பாகம் பாதித்தாலும் கஷ்டம்தான். அதேபோல், சமூகம் என்ற அமைப்பில் பெரும்பான்மை, சிறுபான்மை இணைந்து சமமான வளர்ச்சி என்பதே சரியான சமூக வளர்ச்சி என்றார்.
ராஜ்நாத்சிங் கீழ்கண்ட கருத்தை ஏற்க தயாரா? சிறுபான்மையினர் இந்தியாவில் அச்சமின்றி பயமின்றி பாகு பாடின்றி பெரும்பான்மை மக்களுக்கு சமமாக வாழ ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஏற்க தயாரா? இதை அவர்கள் ஏற்றால், அவர்களின் குருவான கோல்வால்கரின் கொள்கையை துறக்க வேண்டி வரும். அதை அவர்கள் துறக்கத் தயாரா? தேர்தலுக்காக வெறும் வாய்ப்பந்தலை வீசிவிட்டு வாக்கு கேட்பது மோசடி யாகும்.காந்தியை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், பா.ஜ.க.வினர் வேறு யாரை ஏற்றுக்கொள்வார்கள்? காந்தியை கொன்றவர்கள்தான், இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்க வெறியோடு அலைகிறார்கள். இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று சொன்ன ஒரே காரணத்துக்காகத்தானே காந்தியைக் கொன்றார்கள்? இவைகளை எல்லாம் முஸ்லிம்களோ, ஜனநாயகவாதிகளோ, மத நல்லிணக்கம் கொண்டோரோ, மதசார்பின்மை கொண்டோரோ ஏற்க மாட்டார்கள்.

இன்றைய கார்ட்டூன்