இவர்கள் ஆளும் வரை ஏழைகள்…


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா அன்று. ஏழைகள் சிரிக்கவும் இல்லை. இறைவனைக் காணவும் இல்லை. இந்த வகையில் இறைவன் இல்லை என்ற அவர்களது நாத்திகக் கொள்கை நிரூபணமாயிற்று. இப்போது அண்ணாவின் தம்பியான கலைஞர், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். இவர்கள் இலவசங்களை வாரி வழங்குவதற்காகவே, அதன் மூலம் அரசியல் அறுவடை நடத்துவதற்காகவே, ஏழைகள் வாழ்வில் முன்னேறாமலும் அவர்கள் சிரித்து அதில் இறைவன் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.
தமிழக அரசின் அனைத்து இலவசத் திட்டங்களும் தவறு என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக திருமண உதவித்திட்டம், கர்ப்பிணிப்பெண்கள் உதவித்தொகை போன்ற திட்டங்கள் தொடரத்தான் வேண்டும். ஆனால், இவைகளெல்லாம் இலவசத்திட்டங்கள் அல்ல நலத்திட்டங்கள். வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக பெறப்பட்ட இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணம் என்பது இலவசங்களின் பட்டியலில் வராது. வேலை தர வக்கில்லாத அரசு தருகிற குறைந்தபட்ச நிவாரணம் அது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிவிட்டதாக வாய்ப்பந்தல் போடுகின்றனர் கழகத்தினர். ஆனால் 4 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் பெறும் கிராம நிருவாக அலுவலர் பதவிக்கு காலிப்பணியிடம் 2,000 மட்டுமே. ஆனால் இந்தப் பதவிக்கு சுமார் 10 லட்சம் இளைஞர்கள் போட்டி போட்டனர். இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும் தமிழகத்தின் இருண்ட பக்கத்தை.
திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துத் தரப்போவதாகவும் அறிவித்தது. ஆனால் பதவிக்கு வந்த பிறகு 55 லட்சம் ஏக்கர் நிலம் இல்லை என்று கை விரித்துவிட்டனர்.
இலவச டி.விக்கு வருடத்திற்கு ரூ. 750 கோடியென ஐந்து வருடத்திற்கு 3493 கோடி, இலவச கேஸ் ஒதுக்கீடு ரூ. 220 கோடி, இலவச மருத்துவ காப்பீட்டுக்கு ரூ. 501 கோடி, இலவச வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 1800 கோடி. இப்படியான நிலையில் ஏழை விவசாய மக்களுக்கான இலவச நிலம் ஒதுக்கீடுக்கு வெறும் 86 கோடி மட்டும் ஒதுக்கியது. மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட தராமல் பன்னாட்டு நிறுவனங்களும், ஆளும் கட்சி, அதிகார வர்க்கத்தினரும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை சுருட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இலவச டிவி வழங்குவதில் திமுக அரசு மும்முரம் காட்டியது. உலகத்தில் எந்த அரசும் மக்களுக்கு இலவசமாக டி.வி வழங்கியதாக சரித்திரமே இல்லை. மேலை நாடுகளில் சமூக பாதுகாப்பிற்காக அத்தியாவசியங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வாங்கினாலும் கேபிளுக்கு மாதம் ரூ.150 கட்டியாக வேண்டும். வீடுகளுக்குள் பாம்பைப் போல நுழையும் இந்த கேபிள் முதல்வர் குடும்பத்தினர் கைகளில்தான் உள்ளது. முதல்வர் குடும்பத்தில் மோதல் வந்தபோது ரூ. 100 கோடிகளில் அரசு கேபிள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது. ஆனால் பின்னர் இதயம் இனித்திட, கண்கள் பணித்திட சமரசம் ஏற்பட்ட உடன் அரசு கேபிள் அதோ கதியானது. முதல்வரைக் கேட்டால் அடக்கமாகச் செயல்படுகிறது அரசு கேபிள் என்கிறார். அடக்கம் செய்யப்பட்ட இடம் எது என்பதுதான் தெரியவில்லை.
கலைஞர் அறிவித்த கலைஞர் வீட்டு வசதி திட்டத்தால் இருந்த கூரையை பிரித்து வீட்டிற்கான அடித்தளம் மட்டும் போட்டுவிட்டு மக்கள் வீதியில் நிற்பதுதான் மிச்சம். கலைஞர் காப்பீட்டு திட்டத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற மக்கள் தனியார் மருத்துவமனைகளின் தகிடுதத்தக் கொள்ளையினால் அட்மிசனிலிருந்து, அறுத்துப்போட்டப்பின் கொடுக்கப்படும் மாத்திரைகள் வரை மக்கள் பணம் கட்டும் சூழலில்தான் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இலவசங்களுக்காக ஏங்கும் மக்களை அப்படியே வைத்திருந்தால் அப்படியே சில நூறு ரூபாய்களுக்கு அவர்களது வாக்குரிமையை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று கணக்குப்போடுகிறது ஆளுங்கட்சி.
தமிழக மக்கள் எதிர்பார்த்தது இலவசம் அல்ல. கவுரவமான வேலை, கவுரவமான ஊதியம், சுயமரியாதை உள்ள வாழ்க்கை. இவர்களை கடையேழு வள்ளல்களாக காட்டிக்கொள்வதற்கு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் கொடுமைக்கு முடிவு கட்டியாகவேண்டும்.

இன்றைய கார்ட்டூன்