வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்


தனியார் பள்ளிகளில் கோவிந்தராஜன் குழு பரிந்துரையை அமலாக்காவிடில், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு புறம் அரசு அறிவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தான்தோன்றித்தனமாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில பள்ளிகள் ஒருபடி மேலே சென்று அடுத்த கல்வியாண்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்வதும், ‘சொன்ன’ கட்டணத்தை செலுத்த மறுக்கும் பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூக தொண்டாக‘ மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு நிர்வாகம் துணைபோவதோடு, காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகாமலும் பார்த்துக் கொள்கின்றன.
பள்ளி நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த மறுத்து போராட்டங்களை நடத்தினால், அதிகாரிகள் அங்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக நாடகம் நடத்துகின்றனர். கடந்த ஓராண்டு காலமாக ஏராளமான பள்ளிகளை சேர்ந்த பெற்றோர்கள் போராட்டம் நடத்தியும், புகார் செய்தும் ஒரு பள்ளி மீது கூட இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்கு சான்று; தொடரும் இத்தகைய அவலத்தை அம்பலப்படுத்துவதற்காக டிஒய்எப்ஐ-எஸ்எப்ஐ இணைந்து பிப்.27 அன்று சென்னையில் பொது விசாரணை நடத்தியது.இதில் தமிழகம் முழுவதுமிருந்து பிரபலமான பள்ளிகளை சேர்ந்த பெற்றோர்கள் பங்கேற்று பேசினர். “நாங்க சொல்லுற கட்டணத்தைதான் கட்ட வேண்டும், கண்ட நாய்கள் சொல்கிற கட்டணத்தையெல்லாம் வாங்க முடியாது.
இஷ்டம் இருந்தா படிக்க வைங்க. இல்லாட்டி கூட்டிட்டு போங்க.” என்று சென்னை அயனாவரம் கல்கி ரங்கநாதம் பள்ளி நிர்வாகம் கூறுகிறது.“சென்னை, கொளத்தூரில் உள்ள டேனியல் தாமஸ் பள்ளியில் படிக்கும் எனது மகனுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 1450 ரூபாய். ஆனால், 9ஆயிரம் ரூபாய் கட்டியும், மேலும் பணம் கேட்கிறார்கள். அதனை செலுத்த மறுத்ததால், எனது மகனுக்கு கணக்கு புத்தகத்தில், ஒரு பாடத்தில் ஒரு கணக்கை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தையை அடிக்கிறார்கள். ரேங் அட்டை கொடுக்க மறுக்கிறார்கள். தேர்வில், தேர்வு எழுத கூடுதல் பேப்பர் தர மறுக்கிறார்கள்” என்கிறார் ஒரு பெற்றோர்.
ஈரோடு இந்து பள்ளியில் எல்.கே.ஜி.க்கு 3,800 ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு 9ஆயிரம் ரூபாயும் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், எல்.கே.ஜி.க்கு 11ஆயிரம் ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு 40ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். பெற்றோர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டி கட்டணத்தை பிடுங்குகின்றனர். சொன்ன கட்டணத்தை கட்டாத 3 ஆம் வகுப்பு குழந்தையை எல்.கே.ஜி.க்கு மாற்றுகின்றனர். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அமலாகியுள்ளது. வரும் கல்வியாண்டில்தான் பிற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வி அமலாக உள்ளது. நிர்வாகம் சொன்ன கட்டணத்தை கட்டிய மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்தை போதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்கிறார் அப்பள்ளியில் பயிலும் மாணவனின் தந்தை.
மேலும், கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்கு நீதிபதி வாசுகி மாலையில் தடை விதிக்கிறார். ஆனால், தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே, காலை 10மணிக்கு, கோவிந்தராஜன் குழு கட்டணத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, எனவே, பழைய கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பிய ஒரு மாணவனின் தந்தை, ஈரோடு செங்குந்தர் பள்ளி நிர்வாகம் கட்டணத்திற்கு ஏற்ப மாணவர்களை தரம் பிரித்து வகுப்பு நடத்துகிறது. ரவுடிகளை வைத்து பெற்றோர்களை மிரட்டுகிறது என்றார்.சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெஸ்சிமோசஸ் பள்ளி கூடுதல் கட்டணத்தை வகுப்பாசிரியர்களின் பெயர்களில் காசோலையாக வாங்கி வரும்படி குழந்தைகளை நிர்பந்தப்படுத்துகின்றனர்.
இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 11ஆயிரம் ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக, 25ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளோம். மேலும், 7ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அதனை செலுத்த மறுத்துவிட்டனர். அதனை ஈடுசெய்ய, கடந்தாண்டு நிலுவை என்று கூறி வீட்டிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்றார் அப்பள்ளி மாணவியின் தந்தை. சென்னையில் பிரபலமாக அறியப்பட்ட சைதாப்பேட்டை ஆல்பா பள்ளியில் 5 மடங்கு புத்தக கட்டணம் வசூலிக்கின்றனர். மாணவர்களே தேர்வுக்கு பேப்பர் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். சொன்ன கட்டணத்தை கட்டாதவர்களை காலை வழிபாட்டில் தனியாக நிற்க வைக்கின்றனர் என்கிறார் ஒரு மாணவரின் தாய்.குழந்தைகளை முட்டி போட வைப்பது, வகுப்பில் பின் வரிசையில் அமர வைப்பது, அடிப்பது போன்ற சம்பவங்களையும் பெற்றோர்கள் விசாரணையில் கூறினர்.
இந்த விசாரணையில் நீதிபதியாக பங்கேற்ற வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரதசாத், ஒவ்வொரு பள்ளி மீதும் பெற்றோர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதை விட, தமிழக அரசு அதனை செய்ய நிர்ப்பந்தியுங்கள். அந்த வகையில் பெற்றோர்களின் போராட்டம் வெடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு வரும் என்றார்.மற்றொரு நீதிபதியாக பங்கேற்ற கல்வியாளர் வசந்திதேவி, பெற்றோர்கள் நடத்தும் போராட்டங்களின் மூலமே அரசின் சட்டம் உயிரோடு உள்ளது. இல்லாவிடில், அந்த சட்டம் காகிதமாகவே இருந்திருக்கும். பல ஆண்டுகளாக அராஜகம் புரிந்து வந்த அதிகார மையம் பெற்றோர்களின் போராட்டத்தால் ஆட்டம் கண்டுள்ளது. போராட்டம் தீவிரமாகும் போது அதிகார மையம் தகர்ந்துவிடும் என்றார்.கல்வி உரிமைச் சட்டம், அரசு தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்.
குழந்தைகளை பாகுபடுத்துவது, சித்ரவதை செய்வது, மனரீதியாக துன்புறத்துவது, டி.சி கொடுப்பேன் என மிரட்டுவது போன்றவை குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யுங்கள், தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் செய்யுங்கள். தற்போது விசாரணையில் வந்த அம்சங்களை தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழகத்தில் பொது விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் பள்ளிகள், குழந்தைகளை துன்புறுத்தும் பள்ளிகள் மீது கல்வி உரிமைச் சட்டத்தின்படி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யுங்கள். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் 2 கோடி பேர் உள்ளனர். பெற்றோர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தொகுத்து ஆளும் கட்சிக்கு கொடுத்து அதனை நிறைவேற்றினால்தான் வாக்களிப்போம் என்று நிர்ப்பந்தியுங்கள். பிற கட்சிகளிடமும் கொடுத்து, வாக்குறுதி அளித்தால்தான் ஓட்டு போடுவோம் என்று நிர்ப்பந்தியுங்கள் என்றும் வசந்தி தேவி கூறினார்.இந்த பொது விசாரணையில் இருந்து ஒன்று மட்டும் புலப்பட்டது. போராட்ட மொழியே கல்விக் கொள்ளைக்காரர்களையும், அரசு நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் என்பது. அதனை தொடர்வோம்..

இன்றைய கார்ட்டூன்