மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்

அன்புமிக்க மாண்புமிகு உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர், மன்னிக்கவும்... உங்களுக்கு இப்படியெல்லாம் அழைத்தால் பிடிக்காதல்லவா! உங்களுக்குப்பிடித்த மாதிரியே அழைக்கிறேன். அன்புமிக்க அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி அவர்களுக்கு,

ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?

எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு, நான் இளைஞனாக இருந்தபோது, மதுரைத் தெருக்களில், நண்பர்களுடன் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டுடன் உலா வந்த அழகிரியை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் நீங்கள் நண்பர்களுடன்தான் வருகிறீர்கள். ஆனால் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டிற்கு பதில் வேறு ஏதோ இருக்கிறது.

மதுரை மக்களுக்கு, பன்னெடுங்காலமாக ஒரு வழக்கம் இருக்கிறது. தங்களை ஆட்சிபுரிந்த மன்னர்களானாலும் சரி, மக்களாட்சியின் அரசியல் தலைவர்களானாலும் சரி, அவர்கள் பூர்வீக மதுரை மைந்தர்களா அல்லது குடியேறியவர்களா என எண்ணிப்பார்ப்பது கிடையாது. தங்கள் தலைகளில் வைத்து ஆனந்தக்கூத்தாடுவார்கள்... அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் வரையிலும்!

எங்களுக்கு சூது, வாது செய்யத் தெரியாது, மனதில் பட்டதை ‘பட்டென’ சொல்லித்தான் பழக்கம்.

சமீபத்தில் நீங்கள் விடுத்த அறிக்கை எங்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் எங்களை இப்படி கொலைகாரர்களாக... கொள்ளைக்காரர்களாக சித்தரித்ததைப்பற்றி கோபமும் ஒரு சேர வருகிறது. என்ன புரியவில்லையா.. அஞ்சாநெஞ்சரே, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காவல்காத்துக்கொண்டிருந்த அதிகப்படியான போலீஸ்காரர்களை திரும்பப் பெற்றுக்கொண்டது சரிதானே... அவர்களுக்கு தேர்தல் சமயத்தில் வேறுபணிகள் தரலாம் தானே... ஆனால் எங்களால் (மதுரை மக்களால்) உங்களது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டால்... என்று என்றைக்கு அறிக்கை விட்டீரோ அன்றைக்கே எங்களது நெஞ்சம் வெடித்துச் சிதறியது.

உங்களது குடும்பத்தினரால் எடுக்கப்படும் சினிமாவினால்தான் மதுரை கலவர பூமியாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் மதுரை அமைதிப்பூங்காதான்!

அஹிம்சையை போதித்த மகாத்மா, உண்ண உணவில்லாத, உடுக்க உடையில்லாத இந்திய மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து நெஞ்சம் உருகி, தன் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணக் கோலத்தை பூண்ட புண்ணிய பூமி மதுரை.

ஆனால் இன்று, உங்களது நண்பர்கள் சகிதமாக, நீங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை எங்கள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்களுக்கும், உங்களது உறவினர் தயாநிதி மாறனுக்கும் இடையிலான பிரச்சனையில் எறிந்து சாம்பலானது எங்களது மதுரையின் தொழிலாளர்கள் மூன்று பேர். உலகமே இந்த கொடூரக் காட்சிகளை கலாநிதி மாறனின் தொலைக்காட்சி மூலமாக பார்த்தது. ஆனால் நீதிமன்றத்திற்கு மட்டும் சாட்சிகள் இல்லை. உங்களது ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட அந்த மூன்று தொழிலாளர்களின் சாம்பலின் மேல் நின்று நீங்களும், தயாநிதி மாறனும் இன்று ஓட்டு கேட்கிறீர்கள்.

தேர்தல் ஆணையத்தின் தயவால் நாங்கள், மதுரைவாசிகள், சற்று நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது. மதுரையில் உள்ள தெருக்கள் முழுவதும் கடந்த ஐந்து வருடங்களாக நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் குழந்தைகளும் மிகப்பெரிய பேனர்களாக தொங்கிக்கொண்டு, எங்களது மூச்சுக்காற்றினை முட்டிக் கொண்டிருந்தீர்கள். தெருவெங்கும் தொங்கிக்கொண்டிருந்த நீங்கள், எங்கள் மனதுக்குள் புகும் கலையை மட்டும் கற்க மறுத்துவிட்டீர்கள்.

இந்த மதுரை மாநகரத்திலே பி.ராமமூர்த்தி, ஜானகியம்மாள், சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எங்களோடு ஒருவராக வாழ்ந்து மறைந்த பி.மோகன், தோளோடு தோள் உரசிக்கொண்டு எங்களோடு ஒன் பை டூ டீ சாப்பிடும் நன்மாறன் இவர்களின் வீடுகளுக்கோ, அல்லது இவர்களுக்கோ எத்தனை போலீஸ்காரர்கள் காவலுக்கு இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் ஆணையரையும் வேண்டுவ தெல்லாம், தேர்தல் அன்று நேர்மையான வன்முறையற்ற வகையில் வாக்களிக்க எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதுதான்.

என்ன வேதனை பார்த்தீர்களா அஞ்சாநெஞ்சரே, இந்த கோரிக்கையைக் கூட உங்களிடம் எங்களுக்கு வைக்கத் தோன்றவில்லை! நீங்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மந்திரி!

இந்தக்கடிதத்தை முடிப்பதற்கு முன் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மதுரை மக்கள் என்றைக்குமே பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்! (பாசக்காரர்கள்) அவர்களை உங்கள் அராஜகத்தாலோ அக்கிரமத்தாலோ கட்டுப்படுத்த முடியாது. எங்களை பணத்தால் விலைக்கு வாங்கவும் முடியாது.

வாழ்த்துக்களுடன்.

ஏப்ரல் 13க்காக காத்திருக்கும் மதுரைவாசி,

இன்றைய கார்ட்டூன்