விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பால்-பேருந்து-மின் கட்டண உயர்வு மக்கள் வாழ்க்கையைச் சீரழிக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து மார்ச் 27 அன்று மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்
கடந்த
20 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் நவீன தாராளமய பொருளாதாரக்
கொள்கை காரணமாக ஏழை-எளிய உழைப்பாளிகள், கிராமப்புற மக்கள், வியாபாரிகள்,
நடுத்தர மக்கள் என அனைத்துப்பிரிவு மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு
ஆளாக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் மத்திய அரசின்
தவறான பொருளாதாரக் கொள்கைளையே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடத்தும்
தி.மு.க., அ.தி.மு.க., அரசுகளும் செயல்படுத்துகின்றன. அனைத்துப்
பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல், சமையல்
எரிவாயு விலை உயர்வுகள் அனைத்து தரப்பு மக்கள் வாழ்க்கையிலும் தொடர்
பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மேலும் பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ.8 உயரும், சமையல் எரிவாயு விலை பெருமளவு உயரும் என்ற
அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. மத்திய பட்ஜெட்டில் முதலாளிகளுக்கு ரூ.5,000
கோடி வரிச்சலுகை, ஏழை-எளிய மக்களுக்கு ரூ.46,000 கோடி மறைமுக வரிச்சுமை
அறிவிக்கப்பட்டுள்ளது. உர மானியத்தை வெட்டிச்சுருக்கி விவசாயிகள்
வாழ்க்கையை மேலும் சீரழிக்க முனைகிறது மத்திய அரசு. தமிழக பட்ஜெட்டும்
இதற்கு விதிவிலக்கல்ல. எற்கனவே பால் விலை, பேருந்து கட்டணங்கள் கடுமையாக
உயர்த்தப்பட்டுள்ளன. மின்வெட்டால் விவசாயமும், தொழில்களும், மக்களும்
தத்தளிக்கும் சூழலில், மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திட
திட்டமிட்டுள்ளது அதிமுக அரசு. மின்வெட்டைத் தவிர்க்க, சீரான மின்சாரம்
கிடைக்க உருப்படியான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மின்கட்டணத்தை உயர்த்தி
சாமானிய மக்களிடமிருந்து பணத்தை பறித்து பெரும் முதலாளிகளுக்கும், அந்நிய
நிறுவனங்களுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்குவதையே அதிமுக அரசின்
பட்ஜெட் உறுதி செய்துள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் கிடைக்க;
நெல், கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க; தனியார் கல்விக்கட்டணக்
கொள்ளையை தடுக்க; அனைவருக்கும் இலவச, தரமான மருத்துவ வசதி கிடைக்க;
குடிநீர் கிடைக்க; புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க; காலிப்பணியிடங்களை
நிரப்ப; சிறு-குறு மற்றும் பாரம்பரிய தொழில்களைப் பாதுகாக்க தமிழக
பட்ஜெட்டில் எந்த ஆக்கப்பூர்வ அறிவிப்புமில்லை. தானே புயலால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்வது, முறைசாராத் தொழிலாளர்கள்
சமூகப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 என சட்டமியற்றுவது
குறித்தும் பட்ஜெட்டில் ஏதுமில்லை தொழிற்சங்க உரிமை- சங்க அங்கீகாரம்,
கூட்டுப்பேர உரிமை மறுக்கப்படுகிறது. காவல்துறை நவீன மயம் - நில மோசடி,
மணல் திருட்டு, வழிப்பறி, கொலை-கொள்ளைகளை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக,
காவல் நிலையச்சாவுகள், துப்பாக்கிச்சூடு, ஜனநாயக இயக்கங்கள் மீது
அடக்குமுறை, என்கவுண்டர் கொலைகள் அதிகரித்துள்ளன. இத்தகு நிலையில், வறுமை,
வேலையின்மை அதிகரிக்கும், வாழ்வாதாரத்தை பறிக்கும், விலைகளை உயர்த்தி
வாழ்க்கைத்தரத்தை பின்தள்ளும் மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமய
பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பெருமுதலாளிகளுக்கு சாதகமான, ஏழை, எளிய
மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவலுக்கேற்ப மார்ச்
27 அன்று தமிழகம் தழுவிய மறியல் போராட்டம் 200க்கு மேற்பட்ட மையங்களில்
நடைபெறுகிறது. மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மத்திய மாநில அரசுகளின்
கொள்கைகளை எதிர்த்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்த, சீரான மின்சாரம்
கிடைத்திட, பால்- பேருந்து கட்டண உயர்வு - உத்தேச மின்கட்டண உயர்வை
கைவிட, தனியார் பள்ளி-கல்லூரி கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த நடைபெறும்
மறியலில் அனைத்துத்தரப்பு மக்களும் பங்கேற்று, கண்டனம் முழங்க வேண்டுமென
மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்த மறியல் போராட்டத்தில்
வடசென்னையில் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தென்சென்னையில்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன்,எம்எல்ஏ, மாநிலக்குழு
உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ., திருவள்ளுரில் மாநில செயற்குழு உறுப்பினர்
பி.சண்முகம் திருச்சியில் மாநிலசெயற்குழு உறுப்பினர் எஸ்.நுர்முகம்மது
விருதுநகரில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரையில் மாநில செயற்குழு
உறுப்பினர் எம்என்எஸ் வெங்கட்ராமன், கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர்
பி.சம்பத் ஆகியோரும் மற்றும் இதர மையங்களில் மாநில, மாவட்டத் தலைவர்கள்
பங்கேற்கிறார்கள்.