அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத தமிழக நிதிநிலை அறிக்கை மார்க்சிஸ்ட் கட்சி கருத்து

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்த போதும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்காத அறிக்கையாகவே உள்ளது.
   பல்வேறு அம்சங்களில் ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களைப்பற்றி சொல்வதாக மட்டுமே உள்ளது.  புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு ஏற்கனவே இருந்த நிலைமையிலிருந்து எவ்வித முன்னேற்றமுமின்றி தொடர்கிறது. வழிப்பறி, கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம், சமூக விரோதச் செயல்கள்,காவல்துறை அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இதைக் கட்டுப்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. தமிழகத்தில் பல லட்சம் பேர் வீடோ, வீட்டு மனைப்பட்டாவோ இல்லாதவர்களாகவும், அரசுப் புறம்போக்கில் குடியிருப்பவர்களாவும் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்பது தேவையோடு ஒப்பிடுகிறபோது, மிகமிகக் குறைவானதாகும்.கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை,எளிய மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் நிலத்தை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்தும் எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தெரிவித்திருப்பது குடியிருப்போரை அகற்றுவதற்கான முயற்சியோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. வேளாண்துறையைப் பொறுத்தமட்டில், இடுபொருட்களுடைய விலையும், சாகுபடி செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில்  நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலைகள் அதிகரிக்கப்படவில்லை.இதனால் விவசாயிகளுக்கு விவசாயம் இலாபமற்ற தொழிலாக மாறி உள்ளது. இது தமிழக அரசு நிர்ணயித்துள்ள 120 லட்சம் டன் உற்பத்தி என்கிற இலக்கை எட்டுவதற்கு உதவாது. எனவே, நெல்  குவின்டாலுக்கு  ரூ.1,750/- மற்றும் கரும்பு டன்னுக்கு ரூ.3,000/- வழங்க வேண்டும். ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதார அமைப்புகளை ஆழப்படுத்தவும், பராமரிக்கவும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், ஆறுகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் மணல் தங்கு தடையின்றி சட்டத்திற்குப் புறம்பாகவும், திருட்டுத்தனமாகவும் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும்,  அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் எந்த அம்சமும் இடம் பெறாமல் இருப்பது  ஏமாற்றமளிக்கிறது. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டு நில வங்கி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கான பரப்பளவுகள் அதிகரிக்காத நிலையில், ஏற்கனவே உள்ள சாகுபடி நிலங்கள் தொழில்களுக்காக கையகப்படுத்தப்படுவது உணவுப் பொருள் உற்பத்தியைப் பாதிக்கும். எனவே அரசு தனது நிலப் பயன்பாட்டுக் கொள்கையை அறிவிக்கவேண்டும்.விவசாயம் மற்றும் தொழில் இரண்டின் வளர்ச்சியோடும் நிலப் பயன்பாட்டுக் கொள்கை இணைக்கப்பட்டால் மட்டுமே இரண்டு துறைகளிலும் ஏற்படும் வளர்ச்சி நிலைத்ததாக இருக்க முடியும். கடந்த ஆட்சிக்காலத்தில் வந்த அறிவிப்புகளைப் போலவே தொழில் முதலீடுகள் வருவது பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் மூலதனம் அதிகம் தேவைப்படுகிற ஆனால் குறைந்த வேலைவாய்ப்புகள் கொண்ட முதலீடுகளாகும்.எனவே இந்த தேவைப்படுகிற ஆனால் குறைந்த வேலைவாய்ப்புகள் கொண்ட முதலீடுகளாகும்.எனவே இந்த முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துவிடாது.இந்த நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சட்டமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.இந்த நிறுவனங்களில்  தொழிற்சங்க உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.தொழிற்சங்க அங்கீகார சட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. தமிழகம் வரலாறு காணாத மின்வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல்வரின் சங்கரன் கோவில் பேச்சு ஆகியவற்றில் மின்வெட்டுக்கு தீர்வு காண்பது குறித்து சில அறிவிப்புகள் இருந்த போதும், நிதிநிலை அறிக்கையில் அது குறித்து எந்ததிட்டமும் இல்லாதது முதல்வரின் அறிவிப்பின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.  புதிதாக தொழில்கள் வருவது பற்றி கூறப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கான மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும் என்பது பற்றியும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம் தவிர்த்து புதிய மின்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 15 வருட காலத்தில் போதுமான மின்உற்பத்திக்கு திட்டமிடாதது இன்றுள்ள மின்பற்றாக்குறைக்கான காரணமாகும். அதேபோன்று  வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு அளிக்கும் நிலையை மாற்றுவதற்கான எந்த அறிவிப்பும் இதில் இல்லாதது அரசாங்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து மின்கட்டடண உயர்வின் மூலம் நிதியைப்பெற்று பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிப்பதை தொடர்வதையே காட்டுகிறது.மேலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து மத்திய சட்டம் இயற்றப்பட்டிருப்பது பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது தெளிவு படுத்தப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசின் 4-வது நிதிக்குழு தன்னுடைய பரிந்துரையை அளித்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, அது இன்னும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறுவது உள்ளாட்சி அமைப்புகளுக்கான உரிமையை அமல்படுத்துவதில் அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய்க்கு ஆதாரமான சொத்து வரியை மாநில அரசு நியமிக்க உள்ள சொத்துவரி வாரியம் தீர்மானிக்கும் என்பது உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.மேலும் இந்த வாரியத்தின் உள்ளுறை நோக்கம் கேள்விக்குறியது. எனவே, இதை கைவிட வேண்டும்.மேலும் பல நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கான எந்தத் திட்டமும் அறிக்கையில் இல்லை. பிறமொழி இலக்கியங்களும் அறிவுத்துறை படைப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க உரிய முயற்சிகளும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. சமீப காலம் வரை தமிழக அரசு திறந்தவெளியில் மலம் கழிப்போர் யாரும் இல்லையென்றும், அதற்கான தனித்திட்டங்கள் தேவை இல்லையென்றும் அறிவித்துக் கொண்டிருந்தது. இப்போது உண்மையை அங்கீகரித்து  அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இது எந்த வகையிலும் தேவைக்கு ஈடு கொடுப்பதாக அமையவில்லை. தமிழக அரசின் 2012 -2013-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை புதிய முயற்சிகளும், திட்டங்களுமின்றி கடந்த காலத்தைப்போலவே சில வெற்று வாக்குறுதிகளும், சுய தம்பட்டமும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எவ்வித தீர்வையும் முன்வைக்காததாகவும் அதேசமயம் புதிய தாராளமயக் கொள்கைகளை அடிபிசகாமல் பின்பற்றுவதாகவும் இருக்கிறது.

இன்றைய கார்ட்டூன்