அனாதை பிணமாக 49 கோடி பணம்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தல் பல்வேறு பாடங்களை தந்துள்ளது; தந்து கொண்டிருக்கிறது! அது ஏற்படுத்தியுள்ள இரண்டு அம்சங்களை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரமும் ‘வானளாவியது’ என முதன்முதலாக பறைசாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஆவார். அவருக்குப்பிறகு தற்போதைய தலைமை தேர்தல் ஆணை யர் குரேஷியும் வரலாற்றில் இடம்பெற்று விட்டார். தமிழகத்தை பொறுத்தமட்டில் இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் இன்றைய தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தேர்தல் ஆணையர் அமுதா; இவர்களோடு தமிழ கத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவும், அவரது குறிப்பும் என்று சொல்லப்படுகிறது. 


‘அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பார்கள். தெய் வம் நின்று கொல்கிறதோ இல்லையோ, தேர்தல் ஆணையம் (கடமை உணர் வோடு, நாட்டுப் பற்றோடு உள்ளவர்களி டம் இருந்தால்) அரசனாக மாறி அன்றே கொல்கிறதோ, இல்லையோ-சமுதாயத் தில் சில நெறிமுறைகளை நிலைநாட்ட முடியும் என்பதை தமிழகம் தற்போது கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


‘திருமங்கலம் பார்முலா; பென்னாகரம் பார்முலா’ என்கிற (சதி) சூத்திரத்தை நம்பியே ‘சரித்திரம்’ படைக்கலாமென ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கள மிறங்கியது. அதன் சரித்திர சாதனை களை நம்பியல்ல! அவர்கள் கூறும் சாத னைகள் எல்லாம் ‘விலைவாசி உயர்வு’ என்ற வேதனையாக விஸ்வரூபம் எடுத் தது தேர்தல் களத்தில் என்பதுதான் அனு பவம்!


தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியின் இத்தகைய கெடுபிடிக்கு அவர் திருமங்கலம் இடைத்தேர் தலின்போது பார்வையாளராக வந்து பார்த்து சென்றதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இரண்டு அம்சங்களை இத்தேர்தல் தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே புதிய அனுபவங்களாக விட்டுச்சென்றுள்ளது எனலாம், ஒன்று 49-0; மற்றொன்று 49-ஊ! 49-0 தெரியும்; அதென்ன 49-ஊ என்கிறீர்களா? அதா வது ரூ.49 கோடி (உசடிசநள) பணம் தேர்தல் ஆணையத்தால், பறிமுதல் செய்யப் பட்டு, தற்போது அது அனாதை (ப) பிணங்களாக கேட்பாரற்று கிடக்கிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல் லுவது? அதுபோல் இத்தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் முதல் முறையாக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என 49-0 என்கிற வாக்குரிமையை வழங்கியுள்ளது! இது சரியா? தவறா? என்று விரிவாக விவா திக்க வேண்டிய விசயம். ஆனால் அதை யும் தமிழகத்தில் கால் லட்சத்திற்கும் மேலானோர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால்-அதன் அர்த்தம் என்ன? இதில் ஒரு கருத்து மறைந்திருப் பதாகவே கருதப்படுகிறது.


இங்கு நாம் கருத்துரைக்க விழைவது 49-ஊ பற்றியே! தேர்தல் ஆணையத்தின் இந்த பணவேட்டை பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு என்றாலும் இதை இந்தளவுக்காவது இவர்கள் (தேர்தல் ஆணையம்) செய்யாமல் இருந்தி ருந்தால், ‘திருமங்கலம் பார்முலா’ தேர்தலையே கேலிக்கூத்தாக்கியிருக்கும்.


ஒரு கள அனுபவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். நானும், தோழர் ஜி.மணியும் (விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர்) அரூர் சட்டப் பேரவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்தல் பணி யாற்றிக் கொண்டிருந்தோம். மொரப்பூரி லிருந்து அரூருக்கு இருசக்கர வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். வாக்குப் பதிவுக்கு 2,3 நாட்கள் இருந்தது. வாக்குக்கு பணம் கொடுத்தாலும், பெற்றாலும் ஒரு ஆண்டுசிறை என்கிற அறிவிப்பு வெளிவராத சூழ்நிலை. அரூரில் இருந்து மொரப்பூர் சாலையில் 8 கி.மீ. தூரத்தில் சமத்துவபுரம் ஒன்று உள்ளது. அவ்வூரில் திமுக அணியினர் வாக்குக்கு ‘பணப் பட்டுவாடா’ பட்டப் பகலிலேயே செய்துக் கொண்டிருந்தனர். இதை ஏதாவது செய்ய வேண்டுமே என்று நாங்கள் யோசித்தக் கணத்தில், எங்கள் எதிரே, தேர்தல் அலுவலர் வாகனம் ஒன்று வந்தது; உடனே நாங்கள் அவ்வாகனத்தை நிறுத்தி, விபரத்தைக் கூறினோம். வாகனம் அவ்விடத்திற்கு உடனே பாய்ந்து சென்று நின்றது; அப்பொழுது ‘கொடுத்தவர்களும், வாங்கியவர்களும்’ எடுத்த ஓட்டம் இருக்கிறதே, அது தங்கமங்கை பி.டி. உஷாவையே மிஞ்சும் விதமாக இருந்தது. அதன்பின் காவல்துறை வந்தது. பணம் பட்டுவாடாவிற்கு பயன்படுத்திய வாக னம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலில் ஓடி ஒளிந்துவிட்டு, பிறகு பதுங்கி பதுங்கி சோளக்காட்டு வழியாக வந்த பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் மட்டுமே அகப்பட்டுக்கொண்டார்.


அதன்பின் பட்டப்பகலில் ‘பணப் பட்டுவாடா’ என்பது ‘நட்ட நடுநிசி’ க்கு மாற்றப்பட்டது என்பது வேறு விவகாரம்! கள்ளச்சாராயம் விற்பது, கள்ள லாட்டரி டிக்கெட் விற்பது போல், பணப்பட்டு வாடா விசயத்தில் ஒரு ‘கிலி’யை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், என்ன ஆகியிருக்கும் நிலைமை?


‘ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் இருக்கும்’ என தமிழக முதல்வர் வித்தாரமாகப் பேசினார். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று உருகிய பாரதியைப்போல்.. இந்த ‘இலவச லஞ்சங்களை’ ஒழிப்பதில் ஒருபடி முன்னே சென்ற தேர்தல் ஆணையத்தை தான் இந்த தேர்தலில் ‘கதாநாயகனாக’ மக்கள் பார்க்கிறார்கள்! பணவேட் டையில் பிடிபட்டது கடுகளவு தான்; பிடிபடாதது மலையளவு இருக்கும். சுவர் எழுத்து, பேனர், பொதுக்கூட்டம், வாகனம் போன்றவற்றில் தேர்தல் சட்ட நடைமுறைகள் வரவேற்பைப்பெற செய்தது; எல்லாவற்றிற்கும் மேலாக ‘பூத் சிலிப்’ கொடுத்தது மிகுந்த வரவேற்பைப் பெற்றது! இதன் மூலம் அச்சமின்றி வாக்களிக்க அச்சாரமிட்டது தேர்தல் ஆணையம்!


‘ஜனநாயக காவலர்கள்’ என்று தங்களை தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுயநல அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மக்களுக்கு பணம் (லஞ்சம்) கொடுப்பது, அதுவும் வீடு வீடாக தேடிச்சென்று வம்படியாகவும், ஆசை வார்த்தைகளை வீசி, லஞ்சத்திற்கு அடிமையாக்குவது, இதுவே இவர்களின் ‘தேர்தல் யுக்தி’ யாகவும் நிறுவனப்படுத் தப்பட்டு வருகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்றாகவே தோன்று கிறது. இதை எதிர்கொள்வது எதிர்கால சவாலாக இத்தேர்தல் உணர்த்தியுள்ளது எனலாம்.

இன்றைய கார்ட்டூன்