நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்படுமா?

கடந்த ஜனவரி 27ம் தேதியன்று திருச்சி கலையரங்கத்தில் நான்காவது மாநில நிதிக் குழு ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் 4வது மாநில நிதிக்குழு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள பணிந்தர் ரெட்டி ஐஏஎஸ் தலை மையிலும், நிதிக்குழு மானிய உறுப்பினரும் செயலாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, திருச்சி, திண்டுக் கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி நகராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப் பப்பட்டு கலந்து கொண்டேன்.


கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு மாநகராட்சி மேயரான திருச்சி மாநகர் மேயர் கலந்து கொள்ளாததால் மாநக ராட்சியைப் பொறுத்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை; விவாதமும் நடை பெறவில்லை. ஆணையத் தலைவரின் ஆலோசனைப்படி, மாவட்ட ஊராட்சித் தலை வர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், தனித்தனி குழுக்களாக அமர்ந்து ஆணையத் தால் கலந்துரையாடலுக்காக கொடுக்கப் பட்ட பொருள் குறித்து விவாதித்தனர்.

கலந்துரையாடலுக்காக கொடுக்கப்பட்ட பொருளில், முதன்மையாகவும், பிரதானமாக வும் உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவரி, தொழில்வரி, விளம்பர வரி, வரியில்லாத வருவாய்கள் என குடிநீர் கட்டணங்கள், சொத் துக்களில் இருந்து வருவாய், உரிமக் கட்ட ணங்கள் ஆகியவற்றின் மூலம் ‘வருவாய் பெருக்குதல்’ குறித்த கருத்துக்களைக் குறித்து மாற்றி மாற்றி கேள்விகள் எழுப்பி இருந்தன. சொத்துவரி வசூலுக்கு ஏற்ப சொத்து வரி இணை மானியம் வழங்குவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு இருந் தன.

பெரும்பான்மையான நகராட்சிகள் சொத்துவரி விதித்தும் பல்வேறு நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களினால் முழுமையாக வசூலிக்க முடியாத நிலையில் விழி பிதுங்கி தள்ளாடுகின்றன. மேலும் கணி சமாக வருவாய் தரத்தக்க சொத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் மாதச் சம்பளம் கூட வழங்க முடியாத நகராட்சிகள் பல உள்ளன. குடிநீர் ஆதாரத்திற்கும், விநியோகத்திற்கும் போதிய வசதியில்லாத நிறைய நகராட்சிகள் குடிநீர் கட்டணங்களை உயர்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில் உள்ளது.

இத்தகைய சூழ்நிலை மாநில அரசுக்கு நன்கு தெரிந்தும், கல்லிலே நார் உரிக்கின்ற கதையாக உள்ளாட்சி அமைப்புக்கள் சுயமாக வருவாய் பெருக்க வழி சொல்ல வேண்டும் என கருத்துக்கள் கேட்டதால் அலுப்பும், சலிப்பும் அடைந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அதிகாரமற்ற, நிதி ஆதாரமற்ற, அமைப்பு ரீதியாக செயல்பட முடியாத ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

நகராட்சிக்கு வரும் வருவாயும், மாநில நிதி ஆணையத்தில் வழங்கும் தொகையும், 6வது ஊதியக்குழு உயர்வுக்கு உட்பட்டு அலு வலர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கு மட் டும் ஏறக்குறைய 70 சதவீதம் செலவிடப்படு கின்றன. மீதமுள்ள தொகை அலுவலக பரா மரிப்பு, பயணச்செலவு, பொது சுகாதாரச் செலவு என செலவிடப்படுகிறது. பற்றாக் குறை பட்ஜெட்டில் காலம் தள்ளும் நகராட்சி கள், மக்களுக்கு தேவையான அடிப்படைத் திட்டப் பணிகளுக்கு, மத்திய-மாநில அரசு கள் மூலம் கடனுக்காகவும், மானியத்திற் காகவும் கையேந்தும் நிலையில் உள்ளது.

நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப் புகள் சுய அரசாங்கமாக செயல்பட வேண்டு மெனில் அதற்கு அடிப்படையாக நிதி ஆதா ரம் தேவைப்படுகிறது. கடந்த வருடம் 13வது மத்திய நிதி ஆணையக்குழு வருகை தந்த பொழுது, மத்திய வரி வருவாயிலிருந்து மாநில அரசுக்கு 50 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எங்களைப் போன்ற உள் ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் மூலம் வலியு றுத்திய மாநில அரசு, தன்னுடைய வரி வரு வாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து மட் டும் வெளிப்படையாக பேச தயங்குவது ஏன்? என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது.

முதல் மாநில நிதி ஆணையத்தின் பரிந் துரையை மாநில அரசு ஏற்றுக் கொண்டி ருந்தால், கடந்த 2001-2002 ம் ஆண்டே, மாநில அரசின் வரி வருவாயிலிருந்து 12 சதவீ தம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித் திருக்க வேண்டும். அவ்வாறு பகிர்ந்து கொடுக்காத காரணத்தினால், 2வது மற்றும் 3வது மாநில நிதி ஆணையம் முடிந்து பத் தாண்டுகள் ஆன பிற்பாடு மாநில அரசு 10 சத வீதம் மட்டுமே பகிர்ந்தளிக்க முன்வந்துள் ளது என்பதைப் பார்க்கும் பொழுது மாநில நிதி ஆணையம் என்பதே சம்பிரதாய அமைப்பாக மாநில அரசால் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மாநில அரசு ஒருபக்கம் தன் வரி வருவா யிலிருந்து நியாயமாக நிதிப் பகிர்வை உள் ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் ஏய்ப் பதும், மறுபக்கம் நியாயமாக வரக்கூடிய வரு வாயையும் ஏமாற்றிப் பறிப்பதுமான செயல் களைச் செய்து வருகிறது. உதாரணமாக கேளிக்கை வரி வருமானம் நகராட்சிகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருந்து வந்தது. தற்பொழுதைய தமிழக அரசு, தமிழ்ப் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என அறிவித்த காரணத்தினால், கேளிக்கை வரி மூலம் நகராட்சிகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வருவாய்க்கு தடையேற்பட் டுள்ளது. கேளிக்கை வரி ஈடு செய் மானியத் தையும் மாநில அரசு நேரிடையாக நகராட்சிக ளுக்கு வழங்காமல் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு பெரிய திட்டங்களை உள்ளாட்சிப் பகுதிகளில் நிறைவேற்ற கருத்து கேட்கிறது.

அதே போல நகராட்சிகள் பெற்றுவரும் முத்திரைத்தாள் தீர்வை மீதான மேல்வரியை நகராட்சிகளுக்கு வழங்குவதற்கு பதிலாக மாநில அரசு தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்ட மைப்பு நிதிக்கு (கூருசுஐகு) என எடுத்துக் கொள் கிறது. மேலும் விளம்பர உரிமை மற்றும் விளம் பர வரி விதித்தல் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதன் மேல் நகராட்சி களுக்கு கிடைத்து வந்த வருமானம் முறைப் படுத்தப்படாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு உதாரணங்களை கூற முடியும். ஆக மாநில அரசு நிதி ஆதாரத்தை நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன் கட் டுப்பாட்டில் வைத்து இருக்க விரும்புகிறதே அல்லாமல் நகராட்சிகள் சுயமாக செயல் படுவதில் எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்வது இல்லை.

கடந்த 1.6.1993 ம் தேதி முதல் இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் 74 வது சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் 17 ஆண்டுகள் ஆன பிற்பாடும் சட்டத் திருத்தத் தை ஏற்று அமல்படுத்த வேண்டிய தமிழக அரசு, எங்கே அதிகாரமும், நிதி ஆதாரமும் தன் கையை விட்டுப் போய் விடுமோ என்ற அச் சத்தில், இறுக்கமாக உள்ளாட்சி அமைப்பு களின் குரல்வளையை நெரித்து பிடித்துள் ளது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் படி பத்துக்கும் மேற்பட்ட அதிகாரங்களை நகராட்சிகளுக்கு வழங்க மறுக்கும் அதே வேளையில், நகராட்சிகள் ஆற்றிவரும் அத் தியாவசியப் பணியையும் தனியார் மயம் மூலம் சீர்குலைக்க மாநில அரசு கொள்கை முடிவு ஆணை வெளியிடுகிறது.

இதில் மிகவும் வேதனைத் தரத்தக்க விசயம் என்னவென்றால் எந்த ஒரு துறை யிலும் இல்லாத வகையில், காலிப்பணி இடங்களை நிரப்ப தமிழக அரசு நூதனமாக தடை விதித்துள்ளது என்பது தான். நகராட்சி வருவாயில், அலுவலர்களுக்கும், ஊழியர் களுக்கும் வழங்கப்படும் சம்பளத் தொகை 49 சதவீதம் மேலிருந்தால் காலிப் பணி இடங் களை நிரப்பக் கூடாது என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. பற்றாக்குறை பட்ஜெட் டில் பரிதவிக்கும் நகராட்சிகளின் ஒட்டு மொத்த வருவாயில் ஏறக்குறைய 70 சதவீதம், அலுவலகப் பணியாளர்களின் சம்பளத்திற்கே செலவாகிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவ்வாறு இருக்கும் பொழுது தமிழக அரசு இப்படி ஒரு நிபந்தனை விதித்தி ருப்பது, காலிப்பணியிடங்களை நகராட்சி நிர்வாகம் நிரப்பக்கூடாது என்ற நோக்கமே தவிர வேறில்லை. காவல்துறையைக் காட்டி லும், நேரிடையாக மக்களின் அடிப்படைப் பணிகளுக்காக சேவையாற்றும் நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புக்களை நிதி நிலையை கார ணம் காட்டி பணிக்கு ஆள் எடுக்காதே என மறைமுகமாக உத்தரவிடுவதும், மறுபக்கம் ஒப்பந்த அடிப்படையில் அத்தக்கூலிக்கு ஆளெடுக்க (டிரவ ளடிரசஉiபே) கை காட்டுவதும், மத்திய, மாநில அரசுகளைக் காட்டிலும் நேரி டையாக அரசு நிர்வாகம் மற்றும் மக்கள் நலப் பணிகளை ஆற்றி வரும் நகராட்சி அமைப்புக் களை இழுத்து மூடக்கூடிய செயல் ஆகும்.

சட்டப்பூர்வ அமைப்பான மாநில நிதி ஆணையத்தை, சம்பிரதாய அமைப்பாக மாநில அரசு கருதாமல், ஆணையத்தின் மக் கள் பிரதிநிதிகள் சார்ந்த பரிந்துரைகளை ஏற்று நிறைவேற்ற முன்வர வேண்டும். அவ் வாறு இல்லையெனில் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புக்கள் ஜனநாயகத்தின் முழுப் பரிமாணத்தையும் அடைய முடியாது.

இன்றைய கார்ட்டூன்