பெண்ணும் மனித உயிரே...

பெண்களைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், எத்தனை வருணனைகள்! ஓடும் நதிகளிலிருந்து வானத்து நிலவு வரை அனைத்தையும் பெண்களாக உருவகப்படுத்துவது என பெண்களை உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கம் அப்பெண்களைச் சுற்றி அழுத்தமான வட்டம் ஒன்றைப் போட்டு அதனை தாண்டி அவர்கள் வெளியேற விடாமல்
தடைகளை ஏற்படுத்துவது தான் உண்மை நிலையாக உள்ளது. உயிரும், உணர்வும், சதையும் இல்லா கற்பனை பெண்ணிடத்தில் காட்டப்படும் அக்கறை ஏனோ நிஜப் பெண் ணிடத்தில் காட்டப்படுவதில்லை; அவளது உயிரும் உணர்வும் மதிக்கப்படுவதும் இல்லை!

அக்கால பெரும்பான்மை பெண்கள் போன்று வீட்டோடு சுருங்கி விடாமல், சமையலறை தாண்டி சமூகத்திலும் இன்றைய பெண்கள் தடம் பதித்திருந்தாலும், தாக்குதல்களின் வகைகள் மாறியுள்ளதே தவிர, அவைகள் சிறிதும் குறைய வில்லை. பெண்கள் மீதான வன்முறை என்பது உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மனோ ரீதியாகவும் அவர்கள் மீது தொடுக்கப்படுகிறது. கருக்கொலை, சிசுக்கொலை என பிறப்பிலிருந்து தொடங்கப்படும் வன்முறையானது, அவர்கள் இறப்பு வரை நீடிக்கிறது; பல பெண் குழந்தைகள் பாலின துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; இதில் கொடுமை என்னவென்றால், அதை செய்பவர்கள் பெரும்பாலும் அக்குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள்! அல்லது அவர்களுக்கு அறிமுகமானவர்கள்; கோவையில் நடந்த கொடுமை இதற்கு சாட்சியாக உள்ளது. ஏழ்மை நிலை காரணமாக பெற்றோரே பெண் குழந்தை களை விற்று விடும் அக்கிரமமும், அவ்வாறு விற்கப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலாளி யாக மாற்றப்படுவதும் பரவலாக காணப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம், குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை, திராவக வீச்சு, கவுரவக் கொலைகள், சைபர் குற்றங்கள் என பெண்கள் மீதான வன்முறைகள் கணக்கற்று உள்ளன. பெண்கள், வயது வித்தியாசமின்றி, சிறுமிகள் உட்பட, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிறுமி ருச்சிகா விஷயத்தில் டிஜிபி ரத்தோர் போன்று, பாதுகாப்பு தரவேண்டிய காவல் அதிகாரிகளே இதன் காரணக் கர்த்தாக்களாக உள்ளது வெட்கக்கேடானது! ஏப்ரல் 2008ல் ரோஹ்டக் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது சரிதா, இரு காவல் அதிகாரிகளால் பலாத்காரப்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது, புகார் வாங்க மறுக்கப்பட்டதோடு, அவர் கணவர் திருட்டு பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஏடிஜிபி அலுவலகத்தின் முன்பாக சரிதா தற்கொலை செய்து கொண்டார். கிட்டத்தட்ட இதே போன்றதுதான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது-வித்தியாசம், பாதிக்கப்பட்ட பெண் தலித் இனத்தை சார்ந்தவர், குற்றம் செய்தவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ புருஷோத்தம் நரேஷ் துவிவேதி! இந்த எம்எல்ஏ இப்ப சஸ்பெண்டு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு விட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்ததை மாற்ற முடியுமா? ஆந்திராவின் ஆளுனராக இருந்த என்.டி.திவாரி, ஆளுனர் பதவியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தினார்! இவர்கள் அனைவரும் பதவியை ஒரு போர்வையாக, தங்களது அக்கிரமங்களை மறைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தி, அப்பதவிக்கு அழிக்க இயலாத களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். பெண்கள் இப்படி தாக்குதல்களை சந்தித்து வரும் சூழலில், அந்த தாக்குதல்களுக்கு அவர்களது உடையும், நடவடிக்கையும் தான் காரணம் என்று கூசாமல் சொல்லக்கூடிய “கலாச்சாரக் காவலர்கள்” இங்கு அனேகர் உண்டு. பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது., இரவில் பொது இடங்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிப்பவர்கள், பொது இடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவது குறித்து பேசுவது இல்லை. தங்களது சுதந்திரத்தை விலை கொடுத்துதான் அவர்கள் பாதுகாப்பு பெற முடியும், வன்முறையில் இருந்து தப்ப முடியும், என்று சொல்வது எந்த விதத்திலும் சரியில்லாத ஒன்று!

நன்றி: சங்கமுரசு

இன்றைய கார்ட்டூன்