அண்டப்புளுகனும் கபில் சிபலும்

முன்னாடி ஒரு காலத்துல அண்டப்புளுகன், அண்டப்புளுகன்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு ஒரு மவன் இருந்தான். அவம்பேரு என்னமோ சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அந்தப்பய பொறந்த அன்னியிலேயிருந்து பேசவேயில்லையாம்.

அண்டப்புளுகனுக்கு ரொம்பக் கவலையாப் போச்சு. நாம என்னடான்னா ஊருக்குள்ள அண்டப்புளுகு புளுகிக்கிட்டே திரியறோம். அதனால அண்டப் புளுகன்னு அன்பாக் கூப்பிடறாங்க. இந்தப் பய. நாம்பெத்த மவன், நம்ம பேரைக் கெடுத்திருவான்னு போலருக்கே. இவனெல்லாம் புள்ளையா. அப்பன்பேரைக் காப்பாத்தாத பய உசுரோட இருக்கப்படாதுன்னு மனசுல நெனச்சுக்கிட்டான்.

அண்டப்புளுகன் மவனைத் தூக்கித் தோள்ல வெச்சுக்கிட்டு, கம்மாய்க்குள்ள கழுத்தளவு எறங்கிட்டான். பய புள்ளய தண்ணிக்குள்ள வெச்சி அமுக்கிற வேண்டியது தான்.

கழுத்தளவு தண்ணில வந்தவொடனே, மவங்காரன் தண்ணியில கையெ வெச்சித் தொப்புன்னு அடிச்சானாம். ஏலே, எதுக்குலே தண்ணிய அடிச்சன்னு அப்பங்காரன் கேட்டான்.

மவன் சொன்னானாம், யப்பா, பெரிய விரால் மீனப் பிடிச்சுட்டேம்ப்பான்னு.
எங்க காமி பாப்போம்னானாம் அப்பங்காரன்.

அதான், சுட்டுத் தின்னுட்டேன்னு சொன்னானாம் மவன்.

எஞ்செல்லமே, ஒன்னப் போயிக் கொல்லப்பாத்தேனடா. நான் படுபாவின்னு சொல்லி மவனைக் கொஞ்சிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டானாம் அண்டப்புளுகன். அவன் மவன் பேரு தான் ஆகாசப் புளுகன்.

இந்தக் கதைக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி, கபில் சிபல் எதுக்கும் சம்பந்தம் இல்லிங்க.

இன்றைய கார்ட்டூன்