நிராகரிக்கப்பட வேண்டிய சக்தி அமெரிக்க ஏகாதிபத்தியமே

வெகுசில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தங்களோடு பேச்சுவார்த்தை நடத்த நேரில் வந்த அதிபர்யை ஆயுதம் தாங்கிய 800 காவல்துறையினர் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் பாதுகாவலர்களை தாக்கினார்கள். மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ஓட முடியாமல் தனது கைத்தடியை ஊன்றி வேகமாக நடந்து தப்பிக்க முயன்ற ஜனாதிபதியை, அவரது கால் மூட்டிலேயே அடித்தார்கள். சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து தப்பச் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து கொண்டார்கள். அவரைக் கொல்ல முயற்சித்தார்கள். தகவல் அறிந்தும் உடனடியாக ஜனாதிபதியை காப்பாற்ற முயற்சி எடுக்காத ராணுவம், நீண்ட நேரம் கழித்து அதிரடி படையை அனுப்பி, கலகம் செய்த போலீஸ்காரர்களிடமிருந்து 14 மணிநேரம் கழித்து ஜனாதிபதியை காப்பாற்றியது.

பரபரப்பான சினிமாக் கதைபோல நடந்த இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வல்ல. தனது கட்டளைக்கு பணிய மறுத்த ஈக்வடார் தேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஃபேல் கோரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட கொடிய தாக்குதல் இது; காவல்துறைக்குள்ளும் ராணுவத்திற்குள்ளும் இருக்கும் தனது கைக்கூலிகளால் திட்டமிட்டு, ஜனாதிபதியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட கலக முயற்சி இது. ஆனால் தகவலறிந்த சில மணி நேரங்களில் ஈக்வடார் தேசமே கொந்தளித்தது. ஜனாதிபதிக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ஆயுதமேந்திய போலீசாரையும் மீறி உள்ளே நுழைந்தனர். சில இடங்களில் மக்களுக்கும் போலீசாரின் ஒரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதட்டமும் பரபரப்பும் ஈக்வடாரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவே கொந்தளித்தது. வெனிசுலாவும், கியூபாவும், பொலிவியாவும் கோரியாவுக்கு ஆதரவாக குரல்எழுப்பின. சொந்த நாட்டு மக்களும், அண்டை நாட்டு அரசுகளும் எழுப்பிய உறுதிமிக்க ஆதரவுக்குரலால், கோரியா அரசுக்கு எதிரான கலகம் தோற்கடிக்கப்பட்டது.


கடந்த 1987ஆம் ஆண்டிலிருந்தே கலகங்கள், போராட்டங்கள், கொந்தளிப்பு என அமைதியற்ற சூழலை சந்தித்து வந்தது ஈக்வடார். தென்அமெரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் இந்த நாடு, வரலாறு நெடுகிலும் தென்அமெரிக்காவின் இதர நாடுகளைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சூறையாடப்பட்ட ஒரு அமைதி தேசம். கடைசியாக 2005ஆம் ஆண்டு லூசியோ குடிரெஸ் என்பவர் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்தார் துவக்கத்தில் இவர் நன்றாகத்தான் இருந்தார்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு முற்போக்கான அணிசேர்க்கையை உருவாக்கினார். ஆனால் வெகுவிரைவிலேயே ஜார்ஜ் புஷ்ஷின் கைக்கூலியாக மாறினார். அமெரிக்காவுடன் தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்த துரோகத்தால் கொதித்துப்போன ஈக்வடார் மக்கள் குடிரெஸ்க்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவரது ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அதற்குப்பின்னர் 2007இல் நடைபெற்ற தேர்தலில் 45 வயதான ரஃபேல் கோரியா வெற்றிபெற்றார். இவர் கம்யூனிஸ்ட் அல்ல; இடதுசாரி அல்ல. எனினும் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் துவங்கினார். இவர் செய்த முதல்காரியம், ஈக்வடாரின் மன்ட்டா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மக்கள் ஆதரவு திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றினார். அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா உடனான தாராள வர்த்தக உடன்பாட்டை நிராகரித்தார். தனது மக்களுக்கு ஏற்ற கூட்டணி என்று கருதி வெனிசூலாவுடனும் பொலிவியாவுடனும் நெருங்கினார். "எமது அமெரிக்காவின் பொலிவாரியன் கூட்டணி" என்ற பெயரில் அமைந்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர அணிசேர்க்கையில் ஈக்வடாரையும் இணைத்தார்.

கோரியாவை ஆட்சிக்கட்டிலிலிருந்து நீக்குவதற்கு இதைவிட அமெரிக்க ராஜ்யத்திற்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?

67 சதவீதம் மக்கள் செல்வாக்கு இருந்தாலும், ரஃபேல் கோரியா அரசின் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் ஏற்கனவே இருந்த கைக்கூலி அரசுகள் போட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இன்றைக்கும் பயிற்சி அளித்துக்கொண்டிருப்பது அமெரிக்காவே; ஜனாதிபதியாக இருந்து மக்களால் வீழ்த்தப்பட்ட மற்றொரு கைக்கூலியான குடிரெஸின் கட்சி எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. இதற்கும் இதர சில அமைப்புகளுக்கும் அமெரிக்கப் பணம் கொட்டுகிறது; பெரும்பாலான வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளும், ஏடுகளையும் ஆக்கிரமித் திருப்பது வாய்ஸ் ஆப் அமெரிக்கா எனும் அமெரிக் காவின் செய்தி நிறுவனமே.

தனது சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் ஊதிய விகிதத்தில் சில மாறுபாடுகளை கோரியா அரசு அறிவித்தது. எப்போது தாக்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க கையாட்கள், இந்தப் பிரச்சனையை மையப்படுத்தி காவல்துறையினரை தூண்டிவிட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோதுதான் கோரியாவை கொல்ல முயன்றனர்; கலகம் வெடித்தது.

2002இல் வெனிசுலா ஜனாதிபதி சாவேசுக்கு எதிராக கலகம் வெடித்தது; தொடர்ந்து அவர் குறிவைக்கப்பட்டு வருகிறார். 2009இல் ஹோன்டுரஸ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மனுவேல் ஜெலாயாவுக்கு எதிராக கலகம் வெடித்தது; அவர் நாட்டை விட்டே துரத்தப்பட்டார். தற்போது ஈக்வடார் ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்றைக்கும் சிங்கமென கர்ஜிக்கும் மகத்தான மக்கள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ என்ற கம்யூனிஸ்ட்டை மட்டுமல்ல; தனது உத்தரவுக்கு பணியாத எந்த ஒரு நாட்டையும், எந்த ஒரு அரசையும், எந்த ஒரு அதிபரையும் ஏற்பதில்லை.

எனவே, கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதி மக்களாலும், எந்த ஒரு நாட்டாலும் ஏற்கப்பட முடியாத, நிராகரிக்கப்படவேண்டிய சக்தி அமெரிக்க ஏகாதிபத்தியமே...

இன்றைய கார்ட்டூன்