இதுதானம்மா புரட்சி வாழ்க்கை...

அன்போடும் பாசத்தோடும் தோழர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட தோழர் பாப்பா உமாநாத் அவர்கள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவியவர், பெண்ணுரிமைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்து அதற்காக வாழ்நாளெல்லாம் அரும்பணியாற்றிய ஒரு பெண்ணுரிமைப் போராளி. மக்கள் கூட்டங்களில் அவர் நாவன்மையும் உத்வேகமும் மிக்க பேச்சாளி. எழுத்தாற்றல் மிக்கவர்.

பாப்பா உமாநாத் கடந்த டிசம்பர் 17 அன்று திருச்சியில் காலமானார். அவருக்கு செம்மலர் தனது நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. அவர் செம்மலரில் அதன் ஆரம்ப ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதி உதவினார். “திருமணமும் குடும்ப வாழ்க்கையும் (1971 டிச.), “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” (1972, மார்ச்) “வாழ்வை வளமாக்க கடவுளால் முடியாது”(1973, நவ.) “குழந்தைகள் பற்றிய கண்ணோட்டம்” (1973 டிச.), “பெண் விடுதலை வேண்டும்” (1974 செப்.) ஆகிய தலைப்புகளில் அவர் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் அவை.

1972 மார்ச் செம்மலரில் “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” என்ற தலைப்பில் பாப்பா உமாநாத் எழுதிய கட்டுரையொன்று இங்கே வெளியிடப்படுகிறது. அடக்குமுறைக்கும் தாக்குதலுக்கும் அஞ்சாத வீரம் - தியாகம் - அர்ப்பணிப்புமிக்க ஒரு வாழ்க்கையின் உணர்ச்சிமிகு எழுத்துவடிவமாகும் இது.

1950ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி சென்னை மத்திய சிறைச்சாலையில் அன்னை லெட்சுமி வீரமரணமடைந்தார். அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் பேய்த்தனமான அடக்குமுறைக் கொடுமைகளை எதிர்த்து மற்ற தோழர்களுடன் சிறைக்குள் அன்னை லெட்சுமியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பிப்ரவரி 10ம்தேதி ஆரம்பித்த உண்ணாநோன்பு மார்ச் 8 வரை நீடித்தது. ஆனால் மார்ச் 4ம்தேதி விடியற்காலையில் 23வது நாள் உண்ணாநோன்பின்போது அன்னை லெட்சுமி இறந்தார். கடைசி மூச்சுள்ள வரை கம்யூனிஸ இயக்க லட்சியங்களுக்காக வாழ்ந்து, அந்த வேள்வியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அன்னை லெட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் இந்நாளையில் அன்னையைப் பற்றி சில நினைவு களை இங்கு கூற விரும்புகிறேன்.

நமது இந்திய வரலாற்றில் உண்ணாநோன்பிருந்து சிறைக்குள் உயிர்நீத்த முதல் பெண்மணி அன்னை லட்சுமி! அவர் மறைந்து 31 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தியாகத்தின் திருவுருவம், அன்புத் தெய்வ மான இந்த அன்னையின் மணி வயிற்றில் இருந்து, பிறந்து அவர்களை என் அம்மாவாகப் பெற்றதில் நான் எல்லையற்ற பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். என் அம்மாவைப் பற்றி, அவரது வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி அவரது சிந்தனைப்போக்கின் மாற்றங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கை யில் பாட்டாளி வர்க்கத்தின் இலக்கியப் பிரகடனமாக விளங்கும் மாக்சிம் கார்க்கியின் அன்னை நிலோவ்னா என் கண்முன்னே தோன்றுகிறார்.

தான் பெற்ற மக்களை மட்டும் அன்புடன் நேசித்த ஒரு தாய், ‘அகழியில் கிடக்கும் முதலைக்கு அதுதான் வைகுண்டம்’ என்பது போல வீட்டைத் தவிர வெளியே ஒரு பரந்த உலகம் உண்டு என்று அறியாத நிலையில், எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்ற பழமையான பிற்போக்கு கருத்திலே வாழ்ந்த ஒரு தாய், காலப்போக்கில் தனது பிள்ளைகளைப் போல அதே தாய்மைப் பாசத்துடன் மற்றவர்களை, உழைப்பாளர்களை, புரட்சி இயக்கத்தை, அதைச் சார்ந்தவர்களை - சுருங்கக் கூறினால் மனித குலத்தையே நேசிக்க முடியும். அந்த மகத்தான இயக்கத்திற்காகவே தன் உயிரையும் அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு எனது அம்மாவின் வாழ்வே சிறந்தசான்றாக அமைந்துள்ளது. கார்க்கியின் அன்னையில் காணும் சோசலிச யதார்த்தப் பூர்வமன கருப்பொருளும் இதுதானே?

எனது அம்மாவைப் பற்றி நினைவுகள் என்ற அந்த திருக்கோயிலுக்குள் நுழைந்த எனக்கு, அவரைப் பற்றி எதை எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புதான் ஏற்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்பட்டி னத்தில் ரயில்வேத் தொழிலாளியின் 4வது மகளாகப் பிறந்து வெளி உலகைப் பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்து, காரைக்காலில் திரு. பக்கிரி சாமி பிள்ளை என்பவருக்கு இரண்டாந் தாரமாக வாழ்க்கைப்பட்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, ஏழு ஆண்டுகள்கூட மணவாழ்வை சுவைக்க முடியாமல் கணவனை இழந்த கைம் பெண் நிலைக்கு தள்ளப்பட்டபோது அம்மாவுக்கு 27 வயது. இரக்கமற்ற சில உறவினர்களின் கொடுமைகளைக் கண்டு வெகுண்டு, கட்டிய புடவையுடன் 3 மழலைகளுடன் பொன்மலையில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு ரயில் ஏறிய அம்மா வின் கதை இருக்கிறதே அது இன்றைய சமுதாயத் தில் நிராதரவான நிலையில் உள்ள ஆயிரக் கணக் கான பெண்களின் கண்ணீர் காவியம், ரயில் போய்க்கொண்டிருக்கிறது.

டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட் கேட்கும் போதுதான் அம்மாவுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமென்ற நினைவே வந்த தாம். என்ன செய்வது? கண்ணீர்தான் பெருகிற்று! காசு கையிலெ இல்லை. இரக்க மனம் கொண்ட அந்த டிக்கெட் பரிசோதகர் ஆறுதல் சொல்லி, பொன்மலை வந்ததும் இறங்குவதற்கு உதவியும் செய்தாராம். பொன்மலை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும் எப்படி என் மாமா வீட்டுக்குப் போவது என்ற பிரச்சனை. முகவரி தெரியாது. பொன்மலை ரயில்வே காலனியில் முகவரியும் எண்ணும் தெரியாமல் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாது. அம்மாவும் குழந்தை களாக இருந்த நாங்களும் பொன்மலை காலனியைச் சுற்றி சுற்றி வந்ததுதான் மிச்சம். நல்ல காலம் அம்மாவுக்குத் தெரிந்த மாமாவின் நண்பர் ஒருவர் கண்ணில் பட்டார், பிழைத்தோம். பொன்மலை ஒர்க்ஷாப் பில் பணியாற்றும் மாமா வின் வீட்டுக்கு ஒரு வழி யாகப் போய்ச் சேர்ந்தோம். சில காலம் கழித்து மாமாவுக்கு திருமணமானதும் அம்மா பொன் மலை சங்கத்திடலில் ஒரு குடிசை போட்டுக் கொண்டு அங்கு தனியாகத் தனது செல்வங்களுடன் குடிபோனார்கள்.

இயக்கத்துடன் தொடர்பு

பொன்மலை ரயில்வேத் தொழிலாளர் இயக்கத்துடன் ஏற்பட்ட தொடர்புதான் அம்மா வின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல நானும், எனது சகோதரனும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை யும் அளித்தது.

அம்மா கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருந்தார். என் சகோதரன் பி.கல்யாணசுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற வேண்டு மென்பதற்காக பொன்மலை மலைக் கோயிலுக்கு தினசரியும் சென்று வருவார்கள். முன் ஜென்ம பாப வினையைப் போக்க நவக்கிரகங் களை 108 முறை தினசரி சுற்றுவதும் உண்டு. வாழ்க்கையில் வேறு எந்த விதமான பிடிப்பும் இன்றி, வெளி உலகைப் பற்றி, அரசியலைப் பற்றி அறியாத அம்மாவைப் போன்ற பெண்கள் கடவுள் நம்பிக்கையில் இருப்பது தவிர்க்க முடியாதது தானே?

அம்மா உழைப்பை பெருமையாகக் கருது வார்கள். பலகாரங்கள் செய்து விற்பது, பலருக்கு சாப்பாடு செய்து போட்டு மாதக் கணக்கில் பணம் வாங்குவார்கள். எங்களை வளர்ப் பதற்கு அம்மா, பட்டா பாடு இருக்கிறதே, அதை இன்று நினைத்துக் கொண்டாலும் கண்ணீர் வருகிறது. தொழிற்சங்க முழுநேர ஊழியர்கள் பலர் எங்கள் வீட்டில் பணம் கொடுத்து சாப்பிடுவ துண்டு. தனது மக்களைப் போலவே, அம்மா அவர் களை அன் போடு உபசரிப்பார்கள். ஆனால், பணம் ஒழுங்காக கிடைக்காது. நான் வாய்த்துடுக்காகப் பேசிவிடுவேன். அம்மா என்னைக் கண்டிப்பார்கள்.

அம்மாவிடம் இரக்க உணர்ச்சி ஏராளம். சிறு குழந்தைகள் ரோட்டில் அழுது கொண்டிருந்தால் அவர்களைத் தூக்கி சமாதானப்படுத்தி மிட்டாய் வாங்கிக் கொடுப்பதுண்டு. யாருக்காவது பிரசவ உதவிக்கு யாருமில்லை என்றால், அங்கு அம்மா வைப் பார்க்கலாம். நாங்கள் குடியிருந்த பக்கமாக ஒரு கருங்காலி வீடு (1946 ஸ்டிரைக்கில் கருங்காலி யாக இருந்தவர்) அவரது மனைவிக்கு பிரசவ வேதனை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. ஏனெனில் அந்தக்குடும்பத்தை, இயக்கத்துக்கு எதிரானதால் ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் அம்மா அந்த பெண்ணுக்கு உதவப் போனார்கள். பிரசவம் ஆனதும், ஒரு வாரம் அந்தப் பெண்ணுக்கு உதவப்போனார்கள். பிரசவம் ஆனதும், ஒருவாரம் அந்தப் பெண்ணுக்கு பத்தியமாக சமையலும் செய்து போட்டார்கள். அந்த வீட்டில் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். அந்த வைராக்கியமெல்லம் நிறைய அம்மாவிடம் உண்டு. பிரசவமான அந்தப் பெண்ணின் கணவர் (கருங்காலி) அம்மாவைப் பார்த்து என் வீட்டுக்கு ஏன் வந்தீர்கள்” எனக் கேட்டானாம். அம்மாவுக்கு சொல்ல முடியாத கோபம் வந்துவிட்டது. நீ ஒரு மனுசன்தானா? தொழிலாளிகளுக்குத்தான் துரோகம் செய்தாய். உன் மனைவியைப் பற்றி கொஞ்சமாவது உனக்கு இரக்கம் இருக்கா. 
உன் பெண்டாட்டி கதறிய வேதனைக் குரல்தான் என்னை இங்கே வர வைத்தது. நாங்களெல்லாம் மனுச ஜென்மங் களாச்சே உன்னை மாதிரியா” என சுடச்சுட கொடுத்துவிட்டு வந்தார்கள்.

இப்படி ஏனம்மா மற்றவர்களுக்கு உதவுகி றாய் என்று கேட்டால் இன்று மற்றவர்களுக்கு செய்யும் உதவி என் பிள்ளைகளுக்கு பிற்காலத்திற்கு மற்றவர்கள் மூலம் பயன்படும் என்று கூறுவார்கள்.

என் அண்ணனுக்கு ரயில்வே ஒர்க்ஷாப்பில் குமாஸ்தா வேலை கிடைத்த பிறகுதான் எங்கள் வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாக, ஓரளவுக்கு பட்டினியின்றி காலம் தள்ள முடிந்தது. பருவ மடைந்த பெண்ணாகிய நான் அன்று தொழிற்சங்க கூட்டங்களுக்கு மாதர் சங்க வேலைகளுக்கு போய் வந்ததால் சிலர் கேவலமாகப் பேசுவார்கள். எனக்கு வேதனையாக இருக்கும். அப்போதெல்லாம் அம்மா ஊக்கமூட்டுவார்கள். “மடியில் கனம் இருந் தால் தானே வழியிலே பயப்படணும். நாம் போற வழி சரியென்று நமக்குப்படுகிறது. அதுபோதும் ஊரைப்பற்றி கவலைப்படாதே” என உற்சாக மூட்டுவார்கள்.

1946ம் ஆண்டில் நடந்த தென்னகத்தைக் குலுக்கிய ரயில்வேத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது 144 தடையை மீறி மற்ற பெண் களுடன் அம்மாவும் திருச்சி நகரில் உண்டியல் வசூல் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அம்மாவுக்கு அதுதான் முதல் சிறை அனுபவம். அம்மாவும் மற்ற பெண் களும் சிறையில் இருந்த போது தான் பொன்மலை ரயில்வேத் தொழிற்சங்க மைதானத்தில் கூட்டம் நடக்கும் போது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நமது அருமைத் தோழர்கள் ஐவர் உயிரை குடித்தார்கள். பல்லாயிரக்கணக் கானவர்கள் படுகாயமடைந்தனர். சிறைக்குள் இவர்களுக்கு(பெண்களுக்கு) தகவல் கிடைத்தது. எப்படி தெரியுமா? சுடப்பட்டவர்களை லாரியில் ஏற்றி காவிரியாற்றிலே போய்க்கொட்டுவதாக வதந்தி கிளப்பினார்கள். உள்ளே அழுகுரல்கள். அவர்களைப்போய் பார்த்து விவரமும் கூற முடியாது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அம்மாவுக்கு மனதுக்குள் சொல்ல முடியாத வேதனை. அண்ணனும் நானும் இறந்திருப்போம் என்று முடிவுகட்டிவிட்டார்கள் அந்த வேதனையை அடக்கிக் கொண்டு மற்ற பெண்களுக்கு அம்மா ஆறுதல் சொல்வார்களாம். அம்மாவுடன் சிறை யில் இருந்த அம்மணி அம்மாவின் கணவர் தோழர் ராஜு (இறந்த ஐவரில் ஒருவர்). இறந்து போய்விட்டார். அந்த அம்மா வெளிவந்த பிறகு அவரை பார்க்கக்கூட முடியாது போனது.

நிலைமையெல்லாம் தெளிவுபட்ட பிறகு, அம்மாவிடம் நான் கேட்டேன், சிறை வாழ்க்கை எப்படி இருந்தது என்று. கக்கூஸை அள்ளிப் போகும் இரும்பு அண்டா மாதிரி கொண்டுவந்து அதில்தான் சோறு குழம்பெல்லாம் போட்டான். இரண்டொரு நாள் சாப்பிட பிடிக்கவில்லை. அப் புறம் வயிறு கேட்கிறதா? மோரை ஊற்றி கரைத்து குடித்து காலத்தைத் தள்ளினேன் என்றார்கள். பார்ப்பனர்கள் தான் சமைத்துப் போட்டார்களா? என்றேன். அம்மா சிரித்துக் கொண்டே யாராக இருந்தாலென்ன? எல்லோரும் மனிதர்கள்தானே என்று கூறினார்கள்.

கோவிலுக்கு போவது, விரதங்கள் இருப்ப தெல்லாம் படிப்படியாகக் குறைந்து, அறவே இல்லாமல் போய்விட்டன. ஏழைகளுக்கு பாடு படுவதுதான் உண்மையான கடவுள்பக்தி என்று கூறுவார்கள். கடவுள் மீது இருந்த பற்று கம்யூனிஸ்டுக் கட்சியின் மீதுள்ள பற்றாக மாறியது தான் அம்மாவின் சிந்தனையில் ஏற்பட்ட புரட்சி கரமான மாற்றமாக இருந்தது.

கார்க்கியின் அன்னை நிலோவ்னா கடவுள் பக்தியிலிருந்து கடைசி இயக்க பக்தியாக மாறி யதும் சட்டவிரோதமான பிரசுரங்களை சாப் பாட்டுக் கூடைக்குள் வைத்து எடுத்துப்போய் கொடுத்து சாகசம் புரிந்ததும், வாழ்வின் இறுதி நேரங்களில்கூட எதிரிக்கு தலைவணங்காது நிமிர்ந்து நின்ற அந்த ஒப்பற்ற உறுதியும் வீரமும் இருக்கிறதே அது அம்மாவின் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கிறது.

தலைமறைவு வாழ்க்கை

1948-49ம் ஆண்டுகள் கட்சிக்கு மிகவும் சோதனையான ஆண்டுகள்! அடக்குமுறை பேயாட்சி தலைவிரித்தாடிய ஆண்டுகள். எனது சகோதரன் செந்தொண்டர் படை கேப்டனாக இருந்து கைதான பிறகு, என் மீதும் கைது வாரண்டு என்ற நிலையில், நானும் அம்மாவும் தலை மறைவு. கட்சி ஸ்தாபன வேலைக்கு உதவும் பொருட்டு தலைமறைவாகி சென்னைக்குப் பயணம் போனோம்.

மாநில கமிட்டியின் தலைமறைவு அலுவலகத் தில் இணைக்கப்பட்டோம். அங்கு பணியாற்றும் அத்தனை தோழர்களுக்கும் அம்மாவாக, தாய்மைப் பாசத்துடன் நடந்து கொண்டதையும் நடுநிசியில் வரும் தோழர்களுக்குக் கூட கோதுமை மாவைக் கரைத்து தோசை சுட்டுக் கொடுத்து பசியாற்றும் பண்பையும், காரம் கூடாது என்றால் அந்த தோழர்களுக்கு அதற்குத்தக்க சாப்பாடு செய்து கொடுத்து சலிப்பில்லாமல் இன்முகத்துடன் அன்பு செலுத்தியதையும் கூறுவதற்கு வார்த்தைகளில்லை.

வெளியில் சென்ற தலைமறைவு தோழர்கள் வீடு திரும்பும்வரை அம்மாவுக்கு நிம்மதியே இருக்காது. அவர் கூறிச்சென்ற காலம் கடந்து விட்டால் கேட்கவே வேண்டாம். போலீசிடம் அகப்பட்டுக் கொண்டார்களோ என்னவோ என்று கண்கலங்க, என்னிடம் திரும்பத் திரும்ப கேட் பார்கள். விளக்குமாற்று குச்சிகளை கொஞ்சம் எடுத்து, அதில் ஒற்றை இரட்டை எனப் பிரித்து பார்ப்பார்கள். ஒற்றை வந்தால் மகிழ்ச்சியடை வார்கள். இதுமாதிரியான ஜோசியம் பார்ப் பதற்கு அடிக்கடி நான் அம்மாவை கேலி செய் வதுண்டு. ஏதோ மனது சமாதானத்துக்கு செய்து பார்க்கிறேன் என்பார்கள்.

1949ம் ஆண்டு இறுதியில்தான், தலை மறைவாக இருந்த தோழர் உமாநாத் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மனம் ஒன்று பட்ட நிலையில், திருமணம் செய்வது பற்றி அம்மாவிடம் பேசினோம். அம்மாவுக்கு இதில் முழு திருப்தி. மகிழ்ச்சியுடன் ஆதரித்தார்கள். தலை மறைவு வாழ்க்கை முடித்து நாமெல்லாம் சுதந்திர மனிதர்களாக வாழும் காலம் வந்தபின் மணம் செய்யலாமென்று கூறினார்கள். அம்மா குனிந்தால் நிமிர்வதற்குச் சிரமப்படுவார்கள். இடுப்பில் ஒருவித பிடிப்புவலி தோழர் உமாநாத் எப்போதும் அம்மாவுக்கு சமையல் வேலைகளில் சில சமயங் களில் உதவி செய்வார். நான்கூட அன்று “மாமி யாரை காக்கா பிடிப்ப தாக”க் கூறி யதும் தோழர் கள் அனை வரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந் தோம். அது தான் அம்மா வுடன் சேர்ந்து மகிழ்ந்த கடைசி நாள் என்று நினைக் கிறேன். மறு நாள் நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம்.

1950ம் ஆண்டு பிப்ரவரி 5ம்தேதியன்று தலை மறைவு இடம் போலீஸுக்குத் தெரிந்து நாங்கள் இருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. கதவின் சந்து மூலம் போலீஸாரைப் பார்த்த அம்மா, தனது இடுப்பில் பத்திரமாக வைத்திருந்த சில விவரங்கள் இருந்த காகிதத்தை கிழித்து வாயில் போட்டு மென்று முடிக்கவும் கதவை உடைத்துக் கொண்டு போலீஸ் நுழையவும் சரியாக இருந்தது. ஏன் கதவைத் திறக்காமல் இருந்தாய் என்று போலீஸ் காரர்கள் அம்மாவைப் பிடித்து தள்ளியதில் மல்லாக்க விழுந்து மண்டையில் அடி, கையிலும் சிராய்ப்பு காயம். அதைப் பற்றிக் கூட கவலைப் படவில்லை. இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை தான் அவர்களுக்கு. போலீஸாரைப் பார்த்ததும் உயரமான மாடியிலிருந்து பின்பக்கம் குதித்ததால் தோழர் உமாநாத் அவர்களின் கணுக்கால் எலும்பு முறிந்து அடி எடுத்து நடக்க முடியாத நிலையில் அவரும் கைதானார். மற்ற தோழர்களுடன் நாங் களும் முதல் நாள் பல்லாவரம் போலீஸ் நிலை யத்திலும் மறுநாள் பரங்கிமலை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலும் வைக்கப்பட்டோம்.

பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் சரியான குளிர், கீழே விரிப்பு எதுவுமின்றி படுக்க வேண்டிய நிலை. நானும் அம்மாவும் ஒரு அறை யில், அடுத்த அறையில் மற்ற தோழர் கள் அடைக்கப் பட்டோம். இரவு முழு வதும் ஒவ் வொரு வராக எங்களை அழைத்துச் சென்று ‘விசாரணை’ என்ற பெயரில் கடுமையாக அடிக்கப்பட்டோம். என் கன்னத்தில் மாறி மாறி ஒரு போலீஸ் அதிகாரி அறைந்த அறை இருக்கிறதே காதுகூட அடைத்துப் போன மாதிரி இருந்தது. தலைமறைவாக இருக்கும் மற்ற தோழர்களைப் பற்றி விபரம் கேட்டுதான் எனக்கு இந்த அடி. மணிக்கணக்கில் அடித்தும், நயமாகக் கேட்டும் பயனின்றி என்னை இழுத்துவந்து லாக்கப் ரூமில் தள்ளினார்கள். என்னை அம்மா கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? ஏதாகிலும் தகவல் கூறிவிட்டாயா என்று பதட்டத்துடன் கேட்டார்கள். நான் எதுவும் கூறவில்லை என்றதும் பிறகுதான் என்னை அன்புடன் தழுவிக் கொண்டு கண்ணீர் வடித்தார்கள். வலிக்கிறதா என அடிபட்ட இடங்களில் தடவிக் கொடுத்தார்கள்.

அம்மா வையும் போலீஸ் அதிகாரிகள் அழைத்துப் போய் மிரட்டிப்பார்த்தனர். எனக்குக் படிக்கவும் தெரி யாது. யார் வராங்க போறாங்க என்பதும் தெரி யாது. என் மகளுக்கு துணையா இருந்தேன் அவ் வளவுதான் என்று அம்மா கூறினார்கள். ஒரு அதிகாரி, ‘ஒரு கால் நொண்டியாக இருப் பவர் எப்படி நடப்பார்’ எனக் கேட்டாராம். இவ் வளவு பெரிய அதிகாரியாக இருக்கிறீங்க இது தெரியா தா? கால் நொண்டியாக இருப்பவர்கள் கொஞ்சம் சாய்த்து உந்தி நடப்பார்கள் என்று அம்மா கூறிய தும், உடனே இன்னொரு அதிகாரி அப்படி ஒருவர் உங்களுடன் இருந்தாரா என்று கேட்டதற்கு, அம்மா ஒருவருமில்லை என்றதும் அந்த அன்புத் தெய்வத்தைக்கூட அடிப்பதற்கு தவறவில்லை பாவி கள்.

இதன் பிறகு சைதாப்பேட்டை சப்ஜெயிலில் நானும், அம்மாவும் மற்ற தோழர்களும் அடைக் கப்பட்டோம். கஞ்சி வாங்குவதற்கு சிறையில் அளிக்கப்பட்ட தட்டுகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தபோது (சி- வகுப்புக் கைதியாகத் தான் வைக்கப்பட்டோம்) அம்மா, என்னையும் தோழர் உமாவையும் பார்த்து திருமண முடிவு எடுத்த மறுநாளே பிடிபட்டு இப்படி அடிபட்டீர் களே என்று வருத்தப் பட்டார்கள். “இதுதானம்மா புரட்சி வாழ்க்கை. மணமுடிவின் ஆரம்பமே புரட்சியில் ஆரம்பிக்கிறது” என்று தோழர் உமாநாத் கூறியதும் என்னமோ உயிருடன் மீண்டால் பார்ப் போம் என்றார்கள் அம்மா. 

மறுநாள் பிப்ரவரி 10ம்தேதி ஒவ்வொருவரும் தனித்தனியாக லாக்கப்பில் இருக்க வேண்டுமென கட்டாய உத்தரவு. நாங்கள் மறுத்தோம். மலபார் ஸ்பெஷல் போலீசும், ரிசர்வ் போலீசும் ஏராளமாக வரவழைக்கப்பட்டு எங்கள் மீது தடியடிப் பிர யோகம் நடத்தப்பட்டது. சடையைப்பிடித்து தரதர வென என்னை மண்தரையில் இழுத்துச் சென்று மறுபக்கமுள்ள ஒரு ரூமில் தள்ளி பூட்டினார்கள். மண்ணிலும் கல்லிலும் சிராய்ந்து ஒரே எரிச்சல். மண்டையில் தடியடிபட்டு ரத்தக்காயம் வேறு. அம்மாவையும் இப்படியே இழுத்து வந் தார்கள். மற்ற தோழர்களும் கடுமையாக தாக்கப் பட்டு நானும் அம்மாவும் மற்ற 6 தோழர்களும் தனித் தனியாக லாக்கப்பில் அடைக்கப் பட்டோம். இந்தக் கொடுமையை எதிர்த்து பிப்ரவரி 10ந்தேதி அனைவ ரும் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். இதற்கு மறுநாள்தான் சேலம் சிறையில் நம் தோழர்கள் 22 பேரை சுட்டுத் தள்ளினார்கள் என்ற தகவலும் தெரிந்தது! உண்ணாவிரதமிருக்கும் நாங்கள் கக்கூஸ் போக வேண்டுமெனக் கோரினால் இரு கைகளி லும் விலங்கு மாட்டி இழுத்துப்போவார்கள். 24 மணி நேர லாக்கப் தண்டனை வேறு.

உண்ணாநோன்பு ஆரம்பித்து ஒருவாரமாகி யதும் எங்களை ஒவ்வொருவராக சென்னை மத்திய சிறைக்கு எடுத்துப்போக ஆரம்பித்தார்கள். அம்மா வை அழைத்துப்போன 4 தினங்கள் கழித்து என்னை யும் கொண்டு போனார்கள். அப்போதுதான் அம்மாவையும் அங்கு அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. நான் வந்தது தெரிந்து அம்மா மெலிந்த குரலில் என்னை போக முடியாதவாறு தடுத்து அம்மாவை அடைத்திருந்ததில் இருந்து 4வது ரூமில் போட்டு பூட்டிவிட்டார்கள். உண்ணா விரதம் 28 தினங்கள் நீடித்தது. ஆனால் அம்மா உண்ணாநோன்பின் 25வது நாளன்று மார்ச் 4ந்தேதி விடியற்காலை வீர மரண எய்தினார்கள். இறப் பதற்கும் முன்பும் இறந்த பின்னரும்கூட என்னைப் பெற்று ஆளாக்கிய அந்த அன்பு தெய்வத்தை ஒரே இடத்தில் இருந்தும் பார்க்கவே முடியவில்லை. அதற்கு என்னிடம் கேவலமாக ஒரு விலையைக் கேட்டார்கள். என்ன தெரியுமா? “கட்சியிலிருந்து விலகுவதாக” எழுதித்தர வேண்டும். முடியாது என்றதும் அம்மாவை நன்றாக மூடி தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்! லாக்கப்புக்குள் அடைபட்ட நிலையில், இரும்புக்கம்பிகளில் துக்கம் தாளாமல் மோதிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மோதிக் கொண்டதில் தலை வலிக்குமே என்று கூற அங்குதான் அம்மா இல்லையே!
அம்மாவை எங்கு புதைத்தார்கள் என்று கூட இன்றுவரை தெரியாது. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அம்மா தற்கொலை செய்துக்கொண்டு (தூக்குப் போட்டுக் கொண்டு) இறந்துபோனதாக அறிக்கை விட்டார்கள். அயோக்கியத் தனத்தின் கடைசி எல்லை இது.

இறுதிவரை தான் நேசித்த கம்யூனிஸ்ட் கட்சிக்காக, எத்துணை இன்னல்கள் எதிர்நோக்கிய போதும் எதிர்த்து நின்று, அடக்குமுறைக்கு அஞ்சா மல் கட்சியின் கவுரவத்தை உயர்த்திப்பிடித்து தன் இன்னுயிரையே அணுஅணுவாக அர்ப்பணித்த அம்மாவின் நினைவு என்னை என்றென்றும் ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.

இன்றைய கார்ட்டூன்