`ரட்சகனே’ போற்றி! போற்றி!

‘ஒளிரும் இந்தியா’ இன்று சூரிய ஒளியில் நன்றாகவே ஒளிர்ந்து வருகிறது. பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 22,000த்தை தாண்டி விட்டன. நிஃப்டி பங்குச் சந்தைப் புள்ளிகளும் சாதனை படைத்திருக்கின்றன. “மக்களவைத் தேர்தல்களில் மோடி தலைமையில் தேஜகூட்டணி பதவிக்கு வரு வதற்கான சாத்தியமே பங்குச் சந்தையின் இத்தகைய உற்சாகத்திற்கு காரணமாக இருப்பது போல் தெரிகிறது” என நிதிக் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாக பேசியிருக் கிறார். (`ஹிந்துஸ்தான் டைம்ஸ்-மார்ச் 8)

‘துரித உணவு’ அணுகுமுறை!
சந்தைப் புள்ளிகளின் ஏற்ற இறக்கங் களைப் பற்றி பெரு முதலாளிகள் இப்படிப் பேசும் வழக்கம் எப்போதும் உண்டு. அபரிமித மான லாப வளர்ச்சி குறித்த அவர்களது பசிக்கு இத்தகைய ‘துரித உணவு’ அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. 1998ல் பங்குச் சந்தைப் புள்ளிகள் சரிந்த போது, வாஜ்பாய் அரசாங்கம் அமைப்பதற்கான ஆதரவுக் கடிதம் கொடுப்பதை ஜெயலலிதா தாமதப் படுத்துவதால்தான், புள்ளிகள் சரிகின்றன என விளக்கம் அளித்தனர். ஆனால், உண்மையில் அது கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிகழ்வே ஆகும். அதன் விளைவாக வந்தசர்வதேச நெருக்கடியானது, “இது வரைஆசியப் புலிகள் என்று நாம் நம்பி வந்தவற்றின் எலும்புகள் இன்று குப்பைக் கூடைகளில் அள்ளப்பட்டு வருகின்றன” என்ற சுவையான வர்ணனைக்கு உள்ளானது எல்லாம் இன்றும் நம் நினைவில் நிற்பவை.
மீண்டும் அதே விளக்கம்!
2004ல் மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அரசாங்கம் அமைந்த போது, பங்குச் சந்தைப் புள்ளிகள் சரிந்தன. அப் போதும், அவநம்பிக்கையில் புள்ளிகள் சரிவதாகக் கூறினார்கள். இப்போதும் சர்வதேசச் சந்தை சற்று சுறுசுறுப்பாகி வருவதன் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல், ஏதேதோ பேசுகிறார்கள். அமெரிக்காவில் தற் போது வேலைகளின் எண்ணிக்கை சற்றுஉயர்ந் திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த அறிக்கை பங்குச் சந்தையில் ஏற்படுத்தியிருக்கும் உற்சாகமே புள்ளிகளின் உயர்விற்குக் கார ணம். அமெரிக்காவில் வேலையின்மை கடுமையாகி வரும் பின்னணியில், கடந்த இரண்டு மாதங்களாக, புதிய வேலைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. இது நிதி முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பயனாக, இந்தியா உள்ளிட்ட நிதிச் சந்தைகளுக்குள் சர்வதேச மூலதனம் நுழைந்திருக்கிறது.
முதலாளிகளுக்கே உதவும்!
பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் சாமானிய மக்களின் வாழ்நிலையைப் பெரும்பாலும் பிரதிபலிப்பதில்லை. எனினும், முதலாளிகளைப் பொறுத்த மட்டில், நிதிச் சந்தையினைப் பயன்படுத்துவதற்கான சக்தியை அது அதிகரிக்கிறது. கம்பெனிகளின் பங்குச் சந்தை மதிப்பு உயர்வு அவர்களுக்கு அவ்வகையில் உதவுகிறது. தங்களது லாபத் தினை பெருக்கிக் கொள்வதற்கு அது தேவை என்பதால், ஏதாவது ஒரு குறுக்கு வழியில், சந்தைப் புள்ளிகளை உயர் நிலையில் வைப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்கு கிறார்கள்.
சலுகை சார் முதலாளித்துவம்!
‘சலுகை சார் முதலாளித்துவத்தின்’ பயன்பாட்டு அளவினை உயர்த்தும் வகையில், அரசினை நிர்ப்பந்திக்கும் அனுகூலத் தினையும் இது அவர்களுக்கு அளிக்கிறது. “சலுகை சார் முதலாளித்துவத்தினை இந்த நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாது’’ என இந்நாட்டின் பிரதமரே அறிவிக்க வேண்டிய கட்டாயம் வந்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதே வேளையில், ஐமுகூ-2 அரசு இதில் பெருமளவில் ஈடுபட்டது என்பதையும் மறப்பதற்கில்லை. “சமீபத்திய பொருளாதார மந்த நிலைக் காலம் முழுமையுமே, ஒட்டு மொத்த கார்ப்பரேட் வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை”. இது முதலீட்டு வங்கி ஒன்றின் நிர்வாக இயக்குனர் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம். மிகப் பெரிய தனியார் கம்பெனியான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.72ரூ, டெல்கோ, பாரதி ஏர்டெல் ஆகியவை 5.5ரூ, மிகப்பெரும் தனியார் வங்கி ஐசிஐசிஐ 6ரூ என அவர்களின் வருமானம் இக் காலத்தில் பெருகியிருக்கிறது. அரசாங்கம் பெருமுதலாளிகளுக்கு பிரம்மாண்டமான சலுகை களை வழங்கியிருக்கவில்லை எனில், இதுவெல்லாம் சாத்தியமே அல்ல.
தேவை ஒரு ரட்சகர்!
இந்திய முதலாளிகளுக்கு இது போன்று சலுகைகளை தொடர்ந்து வாரி வழங்கும் ‘இரட்சகர்’, ‘வல்லமை பொருந்திய தலைவர்’ ஒருவர் தேவைப் படுகிறார். எனவே, முதலாளி களில் ஒரு பகுதியினர் பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடியின் ‘ஆர்ப்பரிப்பு ஆதரவாளர்களாக’ மாறி விட்டனர். கார்ப்பரேட்டு களுக்கு சலுகை வழங்குவதில் குஜராத் வரலாறு காணா சாதனை படைத்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்பெறப் பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்த கைய சலுகைகள் குறித்து செய்திகள் வெளி வந்துள்ளன. (ஹார்டு நியூஸ்)
வாரி வழங்கும் வள்ளல்!
* குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஹாஜிரா தொழில் மண்டலத்தில் 8 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை, சதுர மீட் டருக்கு ரூ.1 என்ற விலை விகிதத்தில், ஏலம்எதுவுமின்றி எல் & டி நிறுவனத்திற்கு மோடிஅரசாங்கம் வழங்கியிருக்கிறது. சதுர மீட் டருக்கு ரூ.950 என்ற விகிதத்தில் ஏற்கனவே குஜராத் அரசின் நில விலை நிர்ணயக் குழு செய்திருந்த முடிவினை மீறி செய்யப்பட்ட விற்பனை இது. * டாடா நானோ கார் திட்டத்திற்காக மோடி அரசு, சதுர மீட்டருக்கு ரூ. 10,000 என்றநில விலை நிர்ணயிப்புக் குழுவின் முடிவை மீறி, ரூ.900 என்ற விலையில் 1,100 ஏக்கர் வழங்கியிருக்கிறது. * இப்படி டாட்டாவுக்கு வாரி வழங்கிய காரணத்தால், டாட்டா உற்பத்தி செய்யும் ஒவ்வொரு காருக்கும் குஜராத் அரசாங்கக் கருவூலத்திற்கு ஆகும் செலவு ரூ.60,000. * இது தவிர, எஸ்ஸார் மற்றும் அதானி நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் சலுகைகள்.
உயிர்த் துடிப்பான குஜராத்?
இந்த நாட்டின் வறுமை அளவில் மிக உயர்ந்த இடத்தினை குஜராத் வகிக்கிறது என திட்டக் கமிஷன் நியமித்த டெண்டுல்கர் கமிட்டி கூறியிருக்கிறது. குஜராத்தில் சுமார் 4 லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பே கிடையாது. மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அம்மாநிலத்தில் 9,829 தொழிலாளர்கள், 5,447 விவசாயிகள், 919 விவசாயத் தொழி லாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது தான் உயிர்த் துடிப்பான மோடியின் குஜராத். மாநிலத்தின் கடன் சுமை 2008ம் நிதி ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2011ம் ஆண்டில் அது ரூ. 1,12,462 கோடி ஆகும். இந்நிலை யில் மோடி பிரதமரானால், தங்களுக்கு இன் னும் சலுகைகளை அதிகம் வாரி வழங்குவார் என்ற கார்ப்பரேட் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால், அது மக்களைக் கசக்கிப் பிழிவதன் மூலமே அளிக்கப்படும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம்!
1993ம் ஆண்டில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என்ற திரைப்படம் வெளிவந்தது நினைவிருக்கும். இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட படம் அது. அதில், ஜெர்மானிய முதலாளி ஒருவன் மலிவான கூலிக்கு யூதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான். போருக்கு முன்பு, ஒரு யூத அரசு அதிகாரி மூலமாக, யூத முதலாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறான். அரசாங்கத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்கிறான். இந்த யூதர்கள் அனைவரும் இவனது தொழில் லாபம் அதிகரிக்க உதவி யவர்கள்.
எனவே, அந்த ஜெர்மன் முதலாளி, நாஜிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு ஆதரவாக இருந்த யூதர்களின் உயிரைக் காப்பாற்றுகிறான். தனக்கு வேண்டிய யூதர்களுக்கு அவன் இவ்வளவு நன்மைகள் செய்த போதும், அவன் அடிப்படையில் நாஜி களின் ஆதரவாளன். அந்த ஆதரவு குறித்து அவனிடம் கேட்ட போது அவன் கூறுகிற பதில் “போர்க் காலம் தான், தொழிலுக்கு மிக வும் சிறந்த காலம்”. ஆம், லாபத்திற்காக, மனிதஉயிர்கள், தனி மனித சுதந்திரம், கண்ணியம் என எதையும் பலியிடலாம். இந்திய வளர்ச் சியின் பின்னணியில் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
கனவு ஒரு வேளை நிறைவேறினால்…
மோடி குறித்த இந்திய முதலாளிகளின் கனவு நிறைவேறாது. ஒரு வேளை அது நிறை வேறும் பட்சத்தில், வகுப்புவாத வன்முறை, சலுகை சார் முதலாளித்துவத்தால் உந்தப் படும் பிரம்மாண்டமான ஊழல்கள் எல்லாம் கைகோர்த்துக் கொண்டு உலா வரும். பன்முகக் கலாச்சாரத்துடன் ஒத்திசைந்த இந் திய சமூக வாழ்க்கை சிதைந்து விடும். மனிதஉரிமைகள், தனி நபர் சுதந்திரம், சமூக நல்லிணக்கம் ஆகிய அனைத்தும் அழித்தொழிக் கப்பட்டு விடும். அத்துடன் இது நிற்காது. பெரும்பான்மையான மக்களின் வாழ் நிலையை சீரழித்து விடும். ஒரு சிறிய பகுதி உயர் தட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வினை உறுதிப்படுத்தும் வகை யிலான பொருளாதார வளர்ச்சியும், ஒரு மாற்றுப் பொருளாதாரப் பாதையுமே இன்றைய தேவை. அத்தகைய வளர்ச்சி ஒன்றும் எட்ட முடியாதது அல்ல. மாற்றுப் பாதையின் மூலம் கண்டிப்பாக அதைச் சாதிக்க முடியும்.
தமிழில் தொகுப்பு : எம். கிரிஜா நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ் -11.03.14

இன்றைய கார்ட்டூன்