சிலை வழியே ஒரு வலை


ர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயர சிலை வைக்கிறார் நரேந்திர மோடி. அதை காங்கிரஸ் கட்சியும் மற்றவர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த சிலை சார்ந்த அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?”

 -சன் நியூஸ் தொலைக்காட்சியின் (நவ.1)  ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர் முன்வைத்த கேள்வி.  காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராசன், வரலாற்று ஆய்வாளர் காந்தராஜ் ஆகியோரும் பங்கேற்ற இந்த விவாதத்தில் நான் தெரிவித்த கருத்துகளின் சாரம்:


 “நாளை தீபாவளி. தத்துவார்த்தமாக, வரலாற்று அடிப்படையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். பூர்வகுடி மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடிய நரகனைக் கொன்றார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அப்புறம் மக்களின்  கோபத்தைத் திசைதிருப்ப ஏதோ அவனே தனது சாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டான் என்று புராணக்கதை புனைந்து பரப்பினார்கள். எப்படி தன் மக்களுக்காகப் போராடியவனை  அசுரன் என்றும் கெட்டவன் என்றும் சித்தரித்து அடையாளத்தை அழித்தார்களோ, அதே போல் மதச்சார்பின்மைக்காக  உறுதியாக நின்ற படேலின் அடையாளத்தை அழிக்கிற வேலைதான் அவருக்கு மோடி சிலை வைப்பது.

 அன்று அயோத்தியின் பாபர் மசூதி பிரச்சனையைக் கிளப்பிவிட்டபோது இந்துத்துவவாதிகள் சூலாயுதத்தை ஒரு குறியீடாக்கி மதவெறித் தூண்டினார்கள். இப்போது சிலையை ஒரு குறியீடாக்குகிறார்கள்.

 காந்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கும் ஆணையைப் பிறப்பித்தவரே அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல்தான். 1948 பிப்ரவரி 4ல் அந்தத் தடையாணையைப் பிறப்பித்த அவர், “சங் அமைப்பின் ஆட்சேபனைக்குரிய, தீங்கான நடவடிக்கைள் சற்றும் குறையாமல் தொடர்கின்றன. சங் செயல்பாடுகளின் தாக்கத்திலும் தூண்டலிலும் பரவும் வன்முறைக் கலாச்சாரத்திற்கு பலர் பலியாகிவிட்டனர். கடைசியாக பலியான விலைமதிப்பற்ற உயிர் மகாத்மா காந்தியுடையது,” என்று அந்த ஆணையின் அறிவிப்பில் தானே எழுதியிருக்கிறார்.

குஜராத்தில் மோடி இதற்கு முன் காந்தி சிலையைக் கூட வைத்தததாகக் கூறி, அதை எதிர்க்காதவர்கள் இதை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று கேட்கிறார்கள். காந்தி சிலை மிகச் சாதாரணமான முறையில் அமைக்கப்பட்டது. ஆனால் படேல் சிலைக்காக நாடு முழுவதுமிருந்து இரும்பு திரட்டுகிறார்கள். விவசாயிகள் தங்களது மண்வெட்டிகளின் இரும்பை அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள். முன்பு அயோத்திக்கு செங்கல் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தது போன்றதுதான் இது. அது வெறும் செங்கல் அல்ல, அதை ஒரு அடையாளமாக்கி மதவெறியைக் கிளறிவிடுகிற உத்தி. அதே உத்தியாகவே இப்போது இரும்புத் துண்டு.

சிலை அமைகிற இடம் ஒரு சுற்றுலா மையமாக்கப்படும் என்று மோடி அறிவித்திருக்கிறார். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களின் மக்கள் தங்களது நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

 சிலை வைப்பதால் தேர்தலில் வாக்குகள் குவிந்துவிடுமா என்று கேட்கிறீர்கள்.  குஜராத்தில் ஓரளவு அது நடக்கலாம். ஆனால், இதை வெறும் தேர்தல் ஆதாயத்துக்கான உத்தியாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதையும் தாண்டி வேறொரு பயங்கரமான, கவலைக்குரிய விசயம் இதில் இருக்கிறது. இந்தியாவை இந்து மதவெறி நாடாக மாற்றுவது என்கிற ஆர்எஸ்எஸ் சதியின் ஒரு கட்டம்தான் இது.

 இவர்களுடைய இறுதி இலக்கு, ஹெட்கேவர் (ஆர்எஸ்எஸ் தலைவர்) சிலையை வைப்பதுதான். உடனடியாக அதைச் செய்ய முடியாது, இந்தியா மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திய மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால், இந்து மதம் சார்ந்த சிந்தனை கொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிற, ஆனால்  மக்களிடையே பொதுவான நன்மதிப்பு பெற்ற படேலை இப்போதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 காங்கிரசுக்கு மாற்றாக இப்படிப்பட்ட வேலைகளை மட்டும் செய்கிறீர்களே, காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக எதையும் சொல்வதில்லையே ஏன் என்று பாஜக-வைக் கேட்கிறீர்கள். கார்ப்பரேட்டுகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சாதகமான , மக்களைக் கைவிடுகிற பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரசுக்கும் இவர்களுக்கும் கொஞ்சமும் மாறுபாடில்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, தொழிலாளர் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தை சூதாட்டமாக மாற்றுவது, பெட்ரோலிய விலை நிர்ணயத்தில் அரசின் கட்டுப்பாட்டை விலக்கியதைத் தொடங்கிவைத்தது என மக்கள் விரோதக் கொள்கைகள் அனைத்திலும் காங்கிசுக்குச் சமமானவர்கள்தான் இவர்கள். கூடுதலாக, மதவெறித் திட்டத்தைக் கொண்டிருப்பவர்கள். சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, சமூக நீதி எதிர்ப்பு, பன்முகப் பண்பாட்டுக்கு எதிரான ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு, உலகமய-தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் என்று பெரும்பான்மை மக்களுக்கும் எதிரிகள் இவர்கள்.

 இந்த விவாதத்திற்கு “சிலைகளா சிக்கல்களா” என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள். “சிலைகளா வலைகளா” என்று வைத்திருக்கலாம். மக்களுக்கு வீசப்படுகிற வலைகள்தான் இப்படிப்பட்ட செயல்கள். ஆனால், இந்திய மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த வலைகளை மக்கள் அறுத்தெறிவார்கள்

இன்றைய கார்ட்டூன்