நக்கீரன் மெகா சர்வே முடிவு கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே!

‘ஜெயிக்கப்போவது யார்? ‘முந்துவது யார்?’ என்று தேர்தல் சீசனுக்கு ஏற்ப பரபரப்பைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது வியாபாரத் தந்திரமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளைத் துல்லியமாக கணிக்கிறோம் என்ற பெயரில் தனது ஆசைகளையே முடிவுகளாகவும், தனது ஆளும் கட்சி விசுவாசத்தையே கணிப்புகள் என்றும் நக்கீரன் வாரஇதழ் செய்து வருகிறது.

கடந்த மார்ச் 23 மற்றும் 25 என இரு தினங்களிலும் 50 மற்றும் 61 என மொத்தம் 111 தொகுதிகளுக்கு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானப் பூர்வமானது, துல்லியமானது என்று இதனை அந்த இதழ் சோப்பு, சீப்புவிற்கும் வியாபாரி போல் கூவிக் கூவி விற்றுத் தீர்க்கிறது. ஆனால், ஆளும் திமுகவைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அவசரத்தில் சில எளிய அடிப்படை விஷயங்களைக்கூட கவனிக்கவில்லை என்பதே நகைப்பிற்குரியதாகும்.

சங்ககிரியிலும் 1734 வாக்குகளே அதிகம் பெற்ற திமுகவிற்கு இந்த முறையும் வெற்றிபெறும் என்று கணிப்பு சொல்கிறது. ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி 14,640 வாக்குகள் அதிகம் பெற்றது. ஆனால் அத்தொகுதி இழுபறி என்று கணித்துள்ளது நக்கீரன். எனவே, மெகா சர்வே என்ற பெயரில் நக்கீரன் வார இதழ் தனது ஆசையை, ஆளும் கட்சி பாசத்தையே வெளிப்படுத்தியுள்ளது எனலாம்.

இதேபோல் மார்ச் 25ம்தேதி நக்கீரன் இதழில் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி அடிப்படையில் கணிப்பின்படி எடப்பாடி, வீரபாண்டி, வேளச்சேரி, அரவக்குறிச்சி, ஈரோடு மேற்கு, மானாமதுரை மற்றும் மாதவரம் ஆகிய தொகுதிகளில் இழுபறி என்று உள்ளது. ஆனால், அத்தொகுதிகளில் அஇஅதிமுக அணி சுமார் 5 ஆயிரம் முதல் 8000 வரை கூடுதல் வாக்குகள் பெற்ற தொகுதிகளாகும். ஆனால் திமுக அணி வெறும் 236 வாக்குகள் கூடுதல் பெற்ற ஒட்டன்சத்திரம் தொகுதியில் இப்போது அக்கட்சி வெற்றிபெறும் என்று கணிக்கிறது நக்கீரன்.

குறிப்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமி போட்டியிடுகிறார். ஆனால் ‘பழைய நெனப்புடா பேராண்டி’ என்ற கதையாக, திமுக சார்பில் மு.கண்ணப்பன் போட்டியிடுவதாகவும், அவர் கரைசேரும் வாய்ப்பு அதிகம் என்றும் கணிப்பு தெரிவிக்கிறது. கண்ணப்பன் கிணத்துக்கடவில் போட்டியிடுகிறார் என்பதால், நக்கீரனின் மெகா சர்வே இரு தொகுதிகளில் முற்றிலும் பொய்யாகிறது.

தோழர்களின் செங்கோட்டையான இந்தத் தொகுதியில் இலை வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் தங்கவேல் என்றும், தொகுதி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு கூட்டணி வெற்றிக்காக பாடுபடுகிறார்கள் தோழர்கள் என்று நக்கீரன் மெகா சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதியில் யார் வேட்பாளர், எந்த கட்சி போட்டியிடுகிறது என்று கூட தெரியாமல் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.தங்கவேல் போட்டியிடுகிறார். ஆனால் நக்கீரனோ அதிமுக வேட்பாளராக அதாவது இலையின் வேட்பாளராக கே.தங்கவேல் போட்டியிடுகிறார் என நக்கீரன் எழுதி தனது அறியாமையை வெளியிட்டுள்ளது.

மேலும், கணிப்புக்கு ஒரு காரணியாக கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல்படி 6228 வாக்குகள் அதிமுக அணி பெற்றது. ஆனால், கணிப்புப்படி அது இழுபறியாம். ஆனால் பெரம்பூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 490 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்றும் கணித்துள்ளது.

ஸ்ரீ வில்லிபுத்தூர், பெருந்துறை தொகுதிகளில் அதிமுக அணி 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தது. அவற்றிலும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்று நக்கீரன் கணிக்கிறது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெறாத தேமுதிக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை என பல புதிய கட்சிகள் தற்போது இடம் பெற்றுள்ளன. ஆளும் திமுக - காங்கிரஸின் அடுக்கடுக்கான ஊழல்கள், மின்வெட்டு, விலைவாசி உயர்வு என மக்கள் தாங்க முடியாத துன்பத்தில் உள்ளனர். இதற்கு காரணமான ஆளும் கூட்டணிக்கு நக்கீரன் போன்ற எத்தனை பேர் ஒட்டுக் கொடுக்க முனைந்தாலும் அவை ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பது திண்ணம்.

இன்றைய கார்ட்டூன்