காப்பி அடியுங்களேன், ப்ளீஸ்!

தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

உடனே, திமுக எம்.பி., கனிமொழி, திமுக அறிக்கையைப் பார்த்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரிக்கிறது என்று அண்மையில் பேசியிருக்கிறார். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிதானே உரத்த குரல் எழுப்பி வருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே, கீழே என்று இலக்கு வைத்துப் பிரிக்காமல், அனைவருக்கும் ரேசன் (ருniஎநசளயட சiபாவ வடி கடிடின) என்பதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் தேசிய அளவில் இயக்கம் நடததுவதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மத்திய அரசு முறையான உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர மறுப்பதால், மாநில அளவில் செய்வதற்கான முயற்சியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது.

கேரள அரசு ஏற்கனவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போயுள்ளது.

எனவே, ரூபாய் 2-க்கு அரிசி என்பது மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாட்டின் இயல்பான பிரதிபலிப்பே. இதில் காப்பி அடிப்பது என்ற பிரச்சனை எழவில்லை.

அதேசமயம், மேற்கு வங்க, கேரள, திரிபுரா இடதுமுன்னணி அரசுகள் செய்வதை நீங்கள் தாராளமாக காப்பி அடியுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.

அவர்களது நிலச்சீர்திருத்தத்தை, உள்ளாட்சிகளுக்கு நிதி மற்றும் அதிகாரம் கூடுதலாக வழங்கியதை, நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வந்ததை, இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில்

10 சதவீதம் ஒதுக்கியதை, தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை, கேரள பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதை, மேற்குவங்கத்தில் தீண்டாமைக் கொடுமைகளே இல்லாததை, கையால் மனிதக்கழிவை அகற்றும் பணியிலிருந்து தலித் மக்கள் முற்றிலும் விடுவிக்கப்பட்டதை நீங்களும் காப்பி அடியுங்களேன்!

அரிசியை மலிவு விலையில் வழங்குவது பிரச்சனையின் ஒரு அம்சம். ஒரு முழுமையான பார்வையுடன் பிரச்சனையை அணுகினால்தான் நிரந்தரத் தீர்வை நோக்கிப் போகமுடியும்.

உதாரணமாக, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்குக் காரணமாகவுள்ள முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்வது, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை சீரமைப்பது, உண்மையான நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவது, சிறு,குறு தொழில்களைப் பாதுகாப்பது, விளைநிலங்களை இதர பயன்பாடுகளுக்குத் தள்ளாமல் இருப்பது, தவிர்க்க முடியாத பட்சத்தில் சில வரையறைகளை உருவாக்குவது, விவசாயத்தை மட்டுமல்லாமல், விவசாயிகளையும் பாதுகாப்பது, உள்நாட்டுத் தொழில்களை வளர்ப்பது, வேலை வாய்ப்பையும், வாங்கும் சக்தியையும் பெருக்குவது, பணக்காரர்கள் மீது வரி போட்டு ஏழைகள் மீதான சுமையைக் குறைப்பது போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதை செய்வதோடு, மீதியை மத்திய அரசு செய்ய நிர்ப்பந்தம் கொடுத்தால்தான் உணவுப்பாதுகாப்பு சாத்தியமாகும். உணவுப்பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தி, விநியோகம், வாங்கும் சக்தி மூன்றும் இணைந்ததுதானே?

ஐந்தாண்டுகளில் இவற்றையெல்லாம் திமுகவும் செய்யவில்லை. அவர்கள் அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் அரசும் செய்யவில்லை. இவற்றுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டே 2 ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவது சொல்லுக்கும், செயலுக்கும் முரணற்றதாக இருக்கும். அதைத்தான் இடதுமுன்னணி அரசுகள் செய்கின்றன.

தவிர, கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் மூலமாக மட்டும் தமிழக அரசுக்கு வந்த வருமானம் 50,000 கோடி ரூபாய் என்றும், ரூபாய் 1 அரிசிக்கு அதில் செலவழிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.15,000 கோடி மட்டுமே என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. டாஸ்மாக் வருமானமே இல்லாமல் மேற்குவங்கத்தில் 2 ரூபாய் அரிசி அறிவிக்கப்பட்டிருப்பதுதான் சாதனை என்று நாங்கள் கருதுகிறோம். அதையும் கூட முதல்வரின் கருணையால் வந்தது என்று நாங்கள் குறிப்பிடுவது இல்லை. இதை நீங்கள் காப்பி அடிக்கலாமே?

இன்றைய கார்ட்டூன்