அழகான அத்துமீறல்

கிரிவலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை மகன் சந்திரனைத் தெரியாத வர்கள் அந்த சுற்று வட்டாரத்தில் யாருமே இருக்க முடியாது. அவனுடைய கிளாரினட் இசை கேட்ட வர்களின் இதயங்களில் நுழைந்து மயக்குகிறது, உலுக்குகிறது, கலவரப்படுத்துகிறது, கிளர்ந்தெழத் தூண்டுகிறது. அவன் ஒன்பதாம் வகுப்பில் தவறியதும் பள்ளிக் கூடத்துக்கும் தனக்குமான உறவைத் துண்டித்துக் கொண்டான். அதற்கு முக்கியக் காரணம் அவனல்ல, பள்ளிக்கூடம் தான். அது அவன் மீது முட்டாள், மக்கு, உருப்படாதவன், மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாதவன் போன்ற முத்திரைகளைக் குத்தியதோடு நிற்காமல் வண்டி வண்டியாய் குற்ற உணர்வுகளையும் ஏற்றிவிட்டது.

சந்திரன் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்ட கையோடு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு வெளியேறிவிட்டான். எங்கே போனானென்று யாருக்கும் தெரியாது. சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பதாக சிலரும், பெங்களூரில் பார்த்ததாக சிலரும் சொன்னார்கள். என்ன இருந்தாலும் சொந்த ஊரே சொர்க்கம் என்று ஒரு நாள் ஊருக்கு வந்து விடுவான் என்று எல்லோரும் நம்பினார்கள். பக்கத்து ஊர்கள், சொந்தக்காரர்களின் வீடுகள்... எல்லாம் தேடிப் பார்த்துவிட்டு, சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். ஊரில் உள்ளவர்கள் சிலரின் ஆலோசனைப்படி காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்து வைத்தார்கள். சந்திரனின் அம்மா அழுகையை நிறுத்தவே இல்லை. தன் ஒரே பிள்ளையான அவனை நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கிவிடுவார்கள். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மட்டும் எழுந்து உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்கள். அடித் தொண்டையில் ஒப்பாரி வைப்பார்கள், சோகங்களின் வெம்மையை இருட்டில் கரைத்த படி.

“அன்புள்ள அப்பா அம்மாவுக்கு, நலம் நலமறிய ஆவல். நான் சென்னையில் ஒரு பேண்ட் வாத்தியக் குழுவில் கிளாரினெட் வாசிக்கிறேன். சந்தோசமாக இருக்கிறேன். கல்யாணம், வரவேற்பு, வழியனுப்பு, மஞ்சத் தண்ணி என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருக்கின்றன. ஓய்வு கிடைக்கும் போது ஊருக்கு வருகிறேன். இப்படிக்கு மகன் சந்திரன்...” என்று ஓராண்டுக்குப்பின் ஒரு கடிதம் வந்தது. சந்திரன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போன உயிர் திரும்பி வந்துவிட்டது. றெக்கை கட்டிப் பறந்தார்கள். சொந்தக்காரர்களுக்கு சந்தோ சம். ஊருக்கும் ஆசுவாசம்.

கடிதத்தில் சந்திரன் கொடுத்திருந்த முகவரியை வைத்துக்கொண்டு சந்திரனின் பெற் றோர் அவனுடைய தாய் மாமனை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் போனார்கள். சென்னை யின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போய்விட்டார்கள். ரயிலிலும் பஸ்ஸி லும் மாறி மாறிப் பயணம் செய்ததும், சாலை களைக் கடக்க வெகுநேரம் காத்திருந்து திடு திடுன்னு ஓடியதும் புது அனுபவமாக இருந்தது. காலை ஆறுமணிக்கு சென்னைக்குப் போனவர்கள் மதியம் ஒரு மணி வாக்கில்தான் சந்திரனைக் கண்டுபிடித்தார்கள். கொசுக்கள் நிரம்பிய சாக் கடைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடும் பெரிய குடிசைப் பகுதி அது. பெயர் அண்ணா நகர். அங்கே மெயின் ரோட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளி ஒரு சிறிய ஹோட்டல். இட்லி, தோசை, பரோட்டா, பிரியாணி, குஸ்கா, டீ, வர்க்கி, பீடி, சிகரெட், வெத்தல, பாக்கு... எல்லாம் அதில் கிடைக்கும். அந்த ஹோட்டலுக்கு வலது பக்கத்தில் உள்ள சந்தில் தென்னங்கீற்று மறைப்புகளைக் கொண்ட, சிறிய குடிசையில் கை கால்களை அகல விரித்துப் போட்டுக் கொண்டு சந்திரன் தூங்கிக் கொண்டி ருந்தான். குடிசைக்குள் அம்பேத்கர் படம் போட்ட புத்தகங்கள், கம்யூனிஸ்ட் இயக்க வெளியீடுகள், பேண்டு வாத்தியக் கருவிகள், நீலமும் சிவப்பும் கலந்த சீருடைகள் அங்கங்கே சிதறிக் கிடந்தன. சாக்கடை நெடி காற்றின் மணத்தை துர்நாற்றமாய் மாற்றி விட்டிருந்தது.

அம்மா அவனைத் தட்டியெழுப்பியதும் படுக்கையிலிருந்து திடுக்கிட்டெழுந்தான். அம்மா, அப்பா, மாமா மூவரையும் பார்த்ததும் கண்களில் நீர் தளும்பியது. அம்மா அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு “ஏஞ்சாமி எங்கள உட்டுட்டு ஓடியாந்த... நாங்க என்னா சாமி ஒனக்கு கொற வச்சோம்” என்று சொல்லிச் சொல்லி அழுதார்கள். அப்பாவும் மாமாவும் இரண்டு பேரையும் அமர்த்தி ஆசுவாசப்படுத்தினார்கள்.

சந்திரன் ஹோட்டலுக்குப் போய் பிரியாணி வாங்கி வந்தான். எதுக்கு செலவென்று சொல்லியும் கேட்கவில்லை. பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். சென்னைக்கு வந்து, எங்கே போவதென்று தெரியாமல் அலைந்து திரிந்ததை யும், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி யதையும், அடிபட்ட காய்கறிகளைப் பொறுக்கி ரோட்டோரத்தில் கூறுகட்டி விற்றதையும், கிடைத்த உணவைச் சாப்பிட்டு கண்ட இடங் களில் உறங்கியதையும் ஒவ்வொன்றாய்ச் சொன்னான். ஒரு ஆள் குறையுதென்று இவனை அழைத்துச் சென்ற அம்பேத்கர் பேண்டு வாத்தியக் குழுவில் கிளாரினட் கலைஞனாக இவன் வளர்ந்த விதத்தை விவரித்துச் சொன்னான். தாளக் கட்டும் ஓசை நயமும் இவன் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது என்று பேண்டு வாத்தியக் குழுத் தலைவர் சொல்லிச் சொல்லிப் பாராட்டியதைப் பெருமையோடு கூறினான். அப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் அவர் அப்பாவும் அதாவது சந்திரன் தாத்தாவும் சட்டி மேளம் வாசிப்பதில் எல்லோரை யும் தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள். சொல்லுக் கொரு அடியும் பல்லுக்கொரு பதிலுமாய் பொளந்து கட்டுவார்கள்.

கம்பு நுப்பது
கயிறு நுப்பது
கயிறு கட்டுற
தும்பு நுப்பது

ஜஞ்சனக்குடி
ஜனக்குனக்குடி
ஜனக்குனக்குடி
ஜஞ்சனக்குடி

இப்படி தனக்கு ஆரம்பித்த சட்டி மேளப் பாடத்தை சிலாகித்துக் கூற ஆரம்பித்து விட்டார் அப்பா. அவர் முகத்தில் ஒரு சந்தோசம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது. கல்யாண ஊர்வலத்துக்கு அடிக்கிற அடி இதுதான்....

ஜனஜனஜங்
ஜனஜனஜங்
ஜனஜன ஜனஜன
ஜனஜன ஜங்

கேக்குறப்பவே குதிச்சிக்கிட்டு ஓடலாம் போல இருக்கும். சாவுக்கு அடிக்கிறதக் கேட்டா சஞ்சலப் படுறமாதிரியே இருக்கும். அதக் காதுல வாங்கியாச்சினா நெனச்சாகூட நம்பளால கால எட்டிப் போட முடியாது.

ஜங்குச் ஜங்குஜகுச் ஜங்குச் ஜகுஜக்கு
ஜகு ஜகு ஜகு ஜகு ஜகு ஜகு - ஜங்குச்
ஜங்கு ஜகுச் ஜங்குச் ஜகு ஜக்கு
ஜகு ஜகு ஜகு ஜகு ஜகு ஜகு

அப்பா சொல்லச் சொல்ல அதை உன்னிப் பாய்க் கேட்டுக் கொண்டான் சந்திரன். அவருடைய ஆளுமையெல்லாம் தனக்குள் இறங்கியிருப்பதாக ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்பாவும் மாமாவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் கிளாரி னட்டை எடுத்து ஒரு பாட்டு வாசித்தான்:

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டில் மட்டும் தனியாக .....

அப்பா மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். அந்தப் பாட்டுக்கு தப்பும் சட்டி மேளமும் இணைந்தால் எப்படி யிருக்கும் என்று கற்பனையில் வாசித்துப் பார்த்துக் கொண்டார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டி ருந்து விட்டு “எப்ப சாமி ஊருக்கு வருவ?” என்று அம்மா கேட்டார். அவன் கறாராக எந்தப் பதிலும் சொல்லவில்லை. “வர்றம்மா... கட்டாயம் வர்றேன்” என்று மட்டும் சொன்னான்.

கடந்த ஓராண்டில் யார் யாருக்கு கல்யாண மானது, புதுப் பெண்ணாய் கிரிவலம் கிராமத்துக்கு வந்தவர்கள், வாக்கப்பட்டு வெளியூர் போனவர்கள், மண்டையைப் போட்ட பெருசுகள், காதலித்து கைப்பிடித்தவர்கள், காதலித்ததால் சிக்கலில் மாட்டிக் கொண்டவர்கள், மேலத் தெரு பெண் களை இழுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிய சேரிப் பையன்கள், இதனால் ஏற்பட்ட தகராறுகள், புருசன் பொண்டாட்டி பிரச்சனைகள், பங்காளி சண்டைகள், பஞ்சாயத்துக்கள், அடிதடி, வெட்டுக் குத்து... போன்ற ஊர்க் கதைகளை மாலை வரை ஆர அமரப் பேசிக் கொண்டிருந்தார்கள். இரவு திருமண நிகழ்ச்சியில் வாசிக்க சந்திரன் தயாராகை யில் அப்பா, அம்மா, மாமா மூவரும் ஊருக்குக் கிளம்பினார்கள். மறுநாள் போகலாம் என்று சந்திரன் வற்புறுத்தியும் “ஒனக்கெதுக்கு சாமி செரமம் நீ நல்லாயிருந்தா போதும்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்கள். “சீக்கிரம் ஊருக்கு வா சாமி” என்ற வேண்டுகோளை திரும்பப் திரும்ப அம்மா நினைவூட்டாமல் போக வில்லை.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு சந்திரன் அவ்வப்பொழுது பணம் ஐந்நூறு, ஆயிரம் ஊருக்கு அனுப்பினான். அப்பா, அம்மாவுக்கு இது லட்ச மாகவும் கோடியாகவும் தெரிந்தது. ஊரே சந்திரனைப் பற்றி பெருமையாகப் பேசியது. ஒன்றுக்கும் உதவாதவன் என்ற பெயர் உருப்படி யான பையன் என்று மாறிக் கொண்டிருந்தது.

ஒரு தீபாவளிக்கு ஊருக்கு வந்தவன் சென்னைக்குத் திரும்பவில்லை. ஊரையே திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டிருந்தான். எல்லா ரோடும் கலகலப்பாகப் பேசினான். பள்ளிக்கூட வராண்டாவிலும் மாரியம்மன் கோயில் வாசலி லும் தன் வயதுப் பையன்களை அடிக்கடி கூட்டி வைத்துப் பேசிக் கொண்டிருந்தான். இந்தப் பசங்க ளெல்லாம் சேந்து என்னமோப் பண்ணப் போறாங்க என்று ஊர் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் காலையில் கிணத்துக்கு தண்ணீர் எடுக்கப்போன பெண்கள் தான் ‘புரட்சியாளர் அம்பேத்கர் நற்பணி மன்றம்’ என்ற போர்டை மாரியம்மன் கோவில் வாசலில் பார்த்தவர்கள். அவர்கள் மூலம் செய்தி மளமளவென்று பரவி ஊரெல்லாம் கும்பல் கும்பலாக வந்து போர்டை உற்றுப் பார்த்தது, தொட்டும் பார்த்தது, போர்டின் மூன்றில் ஒரு பகுதியை அலங்கரித்துக் கொண்டி ருந்த அம்பேத்கர் முகத்தை ஊரில் பலர் முதல் முதலாகப் பார்த்தார்கள். அவர்களுக்குக் கெல்லாம் காந்தி, எம்.ஜி.ஆர், ரஜினி போன்றவர் களின் முகங்கள் தான் ஏற்கனவே தெரிந்திருந்தது.

மெயின் ரோட்டில் கீழே விழுந்து கிடந்த கை காட்டியைத் தூக்கி நேராய் நட்டு வைத்ததுதான் புரட்சியாளர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் முதல் வேலை. ஊராட்சித் தலைவர் உட்பட யாராலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கை காட்டியை மன்றத்துப் பசங்க நட்டு வச்சிட்டாங்க; பரவால்ல என்று மக்கள் பேசிக் கொண்டார்கள் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் வந்து விழுந்து எழுந்திரிக்கிற இடம் மாரியம்மன் கோவில். அந்தக் கோவிலைச் சுற்றி தென்னை மரங்களை நட்டார்கள். வாசலில் கல்பந்தல் ஒன்று போட்டார் கள். செலவுக்கு தேவைப்பட்ட பணத்தை ஊர் மக்கள் மனமுவந்து நன்கொடையாகத் தந்தார்கள். நல்ல காரியம் என்பதால் அன்னாடங் காய்ச்சிகள் கூட அடிவயிற்றைக் கட்டிக்கொண்டு அள்ளித்தர முன்வந்தார்கள்.

“விடுதலை முழக்கம்” என்ற பெயரில் ஒரு பேண்டு வாத்தியக் குழு சந்திரன் ஒருங்கிணைப்பில் உருவானது. சந்திரன் அப்பா உட்பட ஏற்கனவே சட்டி மேளம் வாசித்தவர்களெல்லாம் இந்தக் குழு வின் அங்கமாகி விட்டார்கள். சட்டி மேளம், தப்பு, தமுறு, தவில், நாயனம் போன்றவை பேண்டு இசைக்குள் கலந்து விட்டன. திருமணம், மாமன் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு, காதுகுத்து, வளை காப்பு, சாவு, கோயில் விசேஷங்கள்... எல்லா வற்றுக்கும் பேண்ட் இசை என்றாகிவிட்டது. ஒவ் வொன்றுக்கும் தனித்தனி கட்டணம். யாரா யிருந்தாலும் அதைத் தந்துவிட வேண்டும். கலப்பு மணத்துக்கும், சாவுக்கும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது. வெளியூர் நிகழ்ச்சிகளுக்கும் குழு போய் வாசித்ததால் முன்பணம் கொடுத்து குழுவை உறுதி செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். இதில் உள்ளூர், வெளியூர், மேலத்தெரு, கீழத் தெரு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

ஒரு மேலத்தெரு சாவுக்கு பழைய மாதிரியே சட்டி மேளம்-தப்பை கேட்டார்கள். சட்டி மேளம் - தப்பெல்லாம் கிடையாது. “தேவை யானால் பேண்ட் குழு வரும். கட்டணம் ஐநூறு” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். மேலத் தெருக்காரர்கள் “இது என்னா புதுசாருக்கு, சாவுன்னா வந்து நாலு தட்டு தட்டிபுட்டு போறது இன்னைக்கு நேத்தைக்கு பழக்கமா... காலங் காலமா உள்ளதாச்சே” என்று பொறுமினார்கள். பொறுமல் எரிச்சலாகவும் கோபமாகவும் மாறின. இனிமே சேரிக்காரர்களை எந்த விசேஷத்துக்கும் கூப்பிடக்கூடாது என்று அவர்கள் பேசிக் கொண் டார்கள். எதுக்கு பொல்லாப்பு எப்பவும் போல போயி கொஞ்ச நேரம் தட்டிபுட்டு வந்தர்லாம் என்று சந்திரன் அப்பா உட்பட எல்லா பெருசு களும் சொன்னார்கள். அதெல்லாம் கூடவே கூடா தென்று புரட்சியாளர் அம்பேத்கர் மன்ற உறுப்பினர் களும் விடுதலை முழக்க பேண்ட் வாத்தியக் குழு வினரும் கறாராகச் சொல்லி விட்டார்கள். மேலத் தெருக்காரர்கள் பக்கத்து ஊர் களில் மேளத்தைக் தேடி அலைந்தார்கள். வந்தால் உள்ளே விட மாட் டோம் என்று மன்றத்துக் காரர் கள் எச்சரிக்கவே யாரும் வரவில்லை. கடைசியில், வேறு வழியில் லாமல், மேலத்தெரு கோயில் பூசாரியை சங்கு ஊதி சேகண்டி அடிக்கச் சொல்லி பிணத்தை சுடு காட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

இந்தச் சம்பவத்தால் மேலத் தெருவுக்கும் சேரிக்கும் பகை மூண்டது. கூலி வேலைக்கு சேரிக் காரர்களை கூப்பிடக்கூடாதுன்னு மேலத் தெருக் காரர்கள் முடிவு செய்தார்கள். இதைக் கேள்விப் பட்டு சேரிக்காரர்கள் ஆத்திரப்பட்டார்கள். மன்றத்துக் பசங்க நம்ப வயித்துல மண்ணள்ளிப் போட்டுட்டாங்களேன்னு சிலர் திட்டித் தீர்த்தார்கள். நம்பளயில்லாம காட்டு வேல எப்பிடி நடக்குதுன்ன பாத்துருவோம்... நம்மை மீறி வெளியூர்க்காரங்க இங்க காலடி வச்சா நடக்குறதே வேற...என்று மன்றத்து இளவட்டங்கள் சவால் விட்டார்கள். இந்தச் சவாலின் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மேலத்தெரு தவித்தது. சவாலின் பேரோசை திசைகள் அதிர தெறித்துப் பரவியது. நமக்கேன் ஊர் வம்பென்று வெளியூர்க் காரர்கள் விலகிக் கொண்டார்கள்.

மன்றம் தினசரி கூடியது. நிலையைப் பரி சீலித்தது. மேற்கொண்டு என்ன செய்வதென்று விவாதித்தது. ஊரே இதை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது. இளைஞர்களின் வார்த்தை களுக்காக காதுகளை அகலத் திறந்துகொண்டு காத்துக் கிடந்தது ஊர். தங்கள் ஆளுகையை மீறா மல் பார்த்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாக்கள் தங்களுடைய கட்டப் பஞ்சாயத்து வருமானமும், இட்லி, தோசை, சாராயமும், நாட்டாமை அந்தஸ்தும் பறிபோனதை நினைத்து உள்ளுக்குள் ஆடிப்போயிருந்தாலும் வெளியில் மற்ற உறுப் பினர்களைக் கேலி பேசித் திரிந்தார்கள். கோரிக் குடுக்குறோம்னு சொல்லிபுட்டு வாரி எறைச்சிப் புட்டானுவோ என்று எகத்தாளமும் ஏகடியமும் பேசினார்கள்.

தண்ணி போன போக்குலியே தானும் போயி பழக்கப்பட்ட மக்களுக்கு தர்மகர்த்தாக் களின் நக்கல்கள் தடவிக் கொடுத்த மாதிரி இருந்தது. இதையெல்லாம் கேட்கக் கேட்க மன்ற உறுப்பினர்களுக்கு கோபம் தலைக்கேறி துள்ளிக் குதித்தார்கள். சந்திரன் அவர்களை அடக்கி வைத் தான். இவர்கள் நம் பரிதாபத்துக்குரிய நண்பர்கள். மேல்சாதி வெறியும் அதனால் பீடத்தைவிட்டு இறங்காத மேலத் தெருக்காரர்களும் தான் எதிரிகள். நம் கோபம் திரும்ப வேண்டிய திசை அவர்களை நோக்கித்தான் என்று தெளிவுபடுத்தினான். சென்னை வாழ்க்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் அவனுக்குக் கை கொடுத்தன. கோபம் கொண்ட இளைஞர்களை கொட்டி தட்டி நேர் செய்ய உதவின. தான் படித்த புத்தகங்களை அவர்களும் படிக்கக் கொடுத்தான். தயங்கித் தயங்கி படித்த வர்கள் புதிய வெளிச்சம் கிடைக்கப் பெற்றதும் அவனிடம் துருவித் துருவி கேள்விமேல் கேள்வியாய்க் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.

மேலத் தெருவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் மகளுக்கு திருமணம். விறகுடைக்க, நெல் அவிக்க, பந்தல் போட... என்று எந்த வேலைக்கும் சேரியிலிருந்து யாரும் போகவில்லை. மேள தாளம் எதுவும் போகவில்லை. திருமணம் கலகலப் பாகவே இல்லை. வெறும் சடங்குகளோடு விசேஷத்தை முடித்துக் கொண்டார்கள்.

ஊர் எல்லையைக் காவல் காக்கிற சடையப்பார் கோவிலுக்கு திருவிழா நடந்தது. வெளியூர்களிலிருந்தெல்லாம் இந்த திருவிழாவுக்கு மக்கள் வருவார்கள். சக்தி அதிகமுள்ள சாமி என்பது சனங்களின் நம்பிக்கை. பூசை போடுதல், ஆடு, கோழி, பன்னி பலியிடுதல் எல்லாம் தடபுடலாக நடக்கும். கோயிலுக்குள்ளே பட்டியலின மக்க ளுக்கு அனுமதியில்லை. வெளியிலிருந்து கும்பிட்டுக் கொள்ளலாம். இந்தத் திருவிழாவுக்கு சேரியிலிருந்து மேளமும் போகவில்லை. ஆட்களும் போகவில்லை. மேளம் வருவது பிரச்சனை யிலிருப்பதால் அதை மேலத் தெருக்காரர்கள் எதிர்பார்க்க வில்லை. ஆனால் சாமி கும்பிட சனங்க வருவாங்க என்று நம்பினார்கள். வராதது அதிர்ச்சி யாக இருந்தது. ஊருக்கும் சேரிக்குமான இடை வெளி அதிகரித்துக் கொண்டே போவது சிலருக்கு வருத்தமாக இருந்தது. குறிப்பாக ஊராட்சித் தலைவர் அதிகம் கவலைப்பட்டார்.

ஒருநாள் ஏரிக்கரைக்குப் பக்கம் வெளி வாசலுக்கு வந்த சந்திரனை ஊராட்சித் தலைவர் மடக்கிப் பேசினார். நிலைமை இப்படியே நீடிப்பது நல்லதல்ல என்றும் இதற்கு சீக்கிரம் ஒரு முடிவுகட்ட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலத் தெருக்காரர்கள் தான் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட வேண்டுமென்றும், அவர் களிடம் ஊராட்சித் தலைவர் பேச வேண்டு மென்றும் சந்திரன் சொன்னான். “காலங் காலமா உள்ள பழக்கத்த நீங்க மாத்துறீங்க. எங்க சனங்க அத ஏத்துக்க மாட்டேங்குறாங்க. இருந்தாலும் நான் பேசிப் பார்த்தேன். நான் ஒரு ஆளு ஒரு பக்கமும் ஊர் முழுக்க எதிர்ப்பக்கமும் நிக்கிறமாதிரி ஆயிரிச்சி. நான் ஓட்டுக்காகத்தான் சேரிக்கு வக்காலத்து வாங்குறேன்னு சிலபேரு திட்டுறாங்க. எனக்கு என்னா பண்றதுன்னு தெரியில” என்றார் ஊராட்சித் தலைவர். “காலங்காலமா உள்ள பழக்கத்த தொடர்றது ஒங்களுக்கு வேண்ணா சவுரியமா இருக்கலாம். ஆனா அது எங்களுக்கு அசௌகரியமா இருக்குது. அதனால எங்களால் தொடர முடியாது. இதோட இன்னும் சில கணக்கு களையும் முடிக்க வேண்டியுள்ளது” என்றான் சந்திரன். ஊராட்சித் தலைவருக்கு அந்தக் கணக்கு களெல்லாம் புரிந்தாலும் புரியாத மாதிரி முகத்தை தூக்கிக் கொண்டார். “தனி நபர் ஆசப்படுறதாலியே சில விஷயங்கள் நடந்துறாது. மக்கள் உணர்வு தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை” என்று சந்திரன் தீர்த்து சொல்லிவிட்டான். ஊராட்சித் தலைவருக்கு மேற்கொண்டு பேச எதுவுமில்லை.

ஊரில் எல்லாப் பிரச்சனைக்கும் மன்றத் துக்கு வரத் துவங்கினர். பழைய தர்மகர்த்தாக் களிடம் பஞ்சாயத்துக்கு யாரும் போவதில்லை. மன்றத்தில் நாள் தவறாமல் சந்திப்பும் விவாதமும் நடந்தன. ஊருக்கும் சேரிக்கும் மேளப் பிரச்சனை வந்த பிறகு அதைப் பற்றிப் பேசாத நாளேயில்லை. என்ன ஆனாலும் இதில் கொஞ்சங்கூட பின்வாங்கக் கூடாதென்பது உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. சுடுகாட்டுக்குப் போக சரியான வழி யின்றி அவதிப்படுவதையும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மேலத் தெருக்களில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க உள்ள தடை பற்றியும் பேசி உடனடியாக அதற்கு முடிவுகட்ட வேண்டு மென்று இளைஞர்கள் கொதித்தார்கள்.

விட்டு விட்டு வந்தாலும் பூமி நனைகிற மாதிரி இரண்டு நாள் நல்ல மழை பெய்தது. சரி யான நேரத்தில் பெய்ததால் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. சேரியில் சொந்த நிலம் உள்ளவர்கள் ஏரு பூட்டி ஓட்டினார்கள். நிலமற்ற விவசாயக் கூலிகள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடினார் கள். சேரி நிலங்கள் புரண்டன. மண் வாசனை வெளியெங்கும் பரவியது.

மேலத் தெருக்காரர்களின் நிலங்கள் உழைக்கும் மக்களின் தீண்டலுக்காக காத்துக் கிடந்தன. சேரி மக்கள் யாரும் வேலைக்கு அழைக் கப்படவில்லை. தங்கள் அடிமடியில் கை வைத்து விட்டார்களே என்று கூலித் தொழிலாளர்கள் அங்கலாய்த்தார்கள்; ஆத்திரப்பட்டார்கள். வாழ்வா சாவா இரண்டிலொன்று பார்த்துவிட வேண்டுமென்று துடித்தார்கள்.

மன்றம் கூடியது. எப்போதுமில்லாத அளவுக்கு ஊர் மக்கள் வந்து குவிந்தார்கள். கூலி, மேளம், சுடுகாடு, செருப்பு... என்று எல்லாப் பிரச்சனைகளும் பேசப்பட்டன. “போராடுகிற வர்கள் தோற்கடிக்கப்படலாம், போராடாதவர்கள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டவர்கள்” என்றான் சந்திரன். புரிந்து கொள்ள கூட்டம் சிரமப்பட்டது. மறுபடி எளிய வார்த்தைகளில் எடுத்துச் சொன் னான். அவன் கூட இருந்த இளைஞர்களும் சேர்ந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத் தினார்கள். வரலாறு நெடுகிலும் சின்னச் சின்ன எதிர்ப்புகளோடு பொறுமிக் கொண்டிருந்த சேரி பொங்கியெழுந்தது. போராடாமல் வாழ்க்கை யில்லை என்ற உணர்வு சேரியை அழகுபடுத்திக் கொண்டிருந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் நற்பணி மன்றம் ஊரின் மனசாட்சியாக மாறிவிட்டது.

சந்திரன் பின்னால் சேரி மக்கள் அணி வகுத்தார்கள். பத்துப் பதினைந்து பேர் ஏர் கலப்பை களைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள். சிலர் எருது மாடுகளை கையில் பிடித்துக் கொண்டார்கள். எல்லோரது கால்களையும் செருப்புகள் அலங் கரித்தன. செருப்புக் காலோடு மேலத் தெருக்களில் ஊர்வலம் போவது, நடந்து நடந்து சுடுகாட்டுப் பாதையை செப்பனிடுவது, கடைசியாக மேலத் தெருக்காரர்களின் நிலங்களில் இறங்குவது. இது தான் திட்டம். எல்லைகளைத் தாண்டாமல் எல்லைகளை விரிவுபடுத்த முடியாது என்ற கருத் தோட்டத் துக்கு எல்லோரும் வந்துவிட்டார்கள்.

பேண்ட் வாத்தியக் குழுவின் முழக்கம் உக்கிரமாய் எழுந்தது. சந்திரனின் கிளாரினெட் இசை கேட்போரையெல்லாம் உலுக்கி யெடுத்தது. கோரிக்கை முழக்கங்களுடன் ஊர்வலம் புறப்பட்டு மேலத்தெருவில் புகுந்து முன்னேறி அழகான அத்துமீறலை நிகழ்த்திக் கொண்டிருந்தது. சந்திரன் அப்பா பாட்டுப் பாடினார். பேண்ட் வாத்தியக் குழு பாட்டின் உக்கிரத்துக் கேற்றபடி வெளுத்து வாங்கியது.

கச்ச வரிஞ்சி கட்டி
கைகள தூக்கிக் காட்டி
ஊர ஒண்ணு கூட்டி
ஓடையில ஏரு பூட்டி....

சந்திரன் அப்பா ஒவ்வொரு வரியாய்ப் பாடப்பாட கூட்டம் திருப்பிப் பாடியது. நான் காவது வரி முடிந்ததும் பேண்ட் குழு வானமும் பூமியும் அதிர-

திடும்டும் திடும்டும் திடும்டும் டும்டும்
திடும்டும் திடும்டும் திடும்டும் டும்டும்

என்று கொட்டி முழக்கியது.

இன்றைய கார்ட்டூன்