எதற்கு இந்த நாடகம்?

மக்கள் நல்ல படங்களை வெகுவாக வரவேற்கின்றனர். ஆனால் “இளைஞன்” அந்த வகையில் எந்த விதத்திலும் அமையவில்லை. தொலைக்காட்சிகளில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் செய்யப்பட்டபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியபோதும் எந்த இளைஞனும் அந்தப் பக்கம் திரும்பிக்கூட படுக்கவில்லை.

லாட்டரி அதிபர் கொடுத்த பணத்தில் திரைக்கதை எழுதப்பட்டதால் என்னவோ “அவருக்கு” நட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தலைவர் வசனம் எழுதிய படம் டப்பாவிற்குள் சீக்கிரமே போய்விடக்கூடாது என்பதற்காகவும் கழக கண்மணிகள் இப்போது புது வழிகளில் திரையரங்குகளை நிரப்ப முயற்சி எடுக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை நகரத்தில் முக்கிய தனியார் பள்ளிகளுக்கு பரிவோடு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இளைஞன் படத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். “பாவம் பிஞ்சுகள்”.

மற்றொரு புறத்தில் கழகத்தின் முக்கிய பெரும்புள்ளிகள் தங்கள் சார்பில் டிக்கெட்டுகளை வாங்கி மொத்தமாக தொண்டர்களிடத்தில் வழங்குகின்றனர். எல்லா வார்டுகளிலும் இலவச டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. அப்படி கொடுத்தும் கூட தொண்டர் படையை தியேட்டரில் காணோம். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் புதுப்படம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், குறைந்தபட்சம் மூன்று வாரமாவது படம் ஓட வேண்டுமாம். இல்லையென்றால் தலைவர் கடுமையாக கோபம் கொள்வார்.

இதே காலத்தில் நம்முடைய நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பல ஊர்களில் திரையிட முடியாமல் இருக்கின்றது. அரசின் சார்பாக வெறும் கண்துடைப்புக்கு வரிவிலக்கு என்று அறிவித்துவிட்டு படம் திரையிடாமல் இருப்பதற்கு மறைமுகத்தடைகள் எனும் பட்டியல் நீளுகின்றது.

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் படம் திரையிடப்படுவதற்கு இடது சாரி இயக்கங்கள், கலை இலக்கிய அமைப்புகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.

விந்தை என்னவென்றால், இளைஞன் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என விளம்பரத்தில் பேசும் சில தலைவர்கள் அம்பேத்கார் படத்தை திரையிட மக்கள் வந்து பார்க்க என்ன முயற்சி எடுத்துள்ளனர் என்ற கேள்வி எழுகின்றது.
இன்றைய கார்ட்டூன்